ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை மூட வேண்டும்
07 Oct,2018
தினமும் நஷ்டத்தில் இயங்கி வரும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நாட்டுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளதாகவும் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் 7 ஆயிரம் ஊழியர்களுக்கு இழப்பீடுகளை வழங்கி நிறுவனத்தை மூடி விடுவது சிறந்தது எனவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையான காலத்தில் 18 ஆயிரத்து 400 கோடி ரூபாய் நஷ்டத்தையும் மிஹன் லங்கா ஆயிரத்து 900 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களின் நஷ்டம் என்பது 20 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு போன்ற விடயங்களுடன் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் இந்த வருடத்தில் மட்டும் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் வாழும் அனைவரும் தலா 10 ஆயிரம் ரூபாய் கடனாளியாக மாற்றியுள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை தொடர்ந்தும் நடத்துவதா இல்லையா என்பதை உடனடியாக தீர்மானிக்க வேண்டும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.