தென்கொரியாவில் நடந்த வன்புணர்வு கொலை, விசாரிக்கும் இலங்கை
04 Oct,2018
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவம் குறித்த வழக்கொன்று இலங்கையில் விசாரணைக்கு வந்துள்ளது.
தென்கொரியாவில் 1998ஆம் ஆண்டு பதிவான கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
வெளிநாட்டில் குற்றம் புரிந்த இலங்கையர்களை விசாரணை செய்யும் அதிகாரம் இலங்கையின் நீதிமன்றம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
தென்கொரியாவில் நடந்த கூட்டுப் பாலியல் வல்லுறவு சம்பவத்தில் இலங்கையர் மூவருக்கு தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்த விசாரணைகளை இலங்கை குற்றப் புலனாய்வுத் துறையினர் தற்போது ஆரம்பித்துள்ளனர். இந்த விசாரணைகள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை தெளிவுபடுத்தினர்.
இந்த வழக்கு புதன்கிழமை (03.10.2018) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த மூன்று சந்தேக நபர்களும் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடை செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்தனர்.
இலங்கையை சேர்ந்த ஒருவர் நாட்டின் எல்லைக்கு அப்பால் செய்யும் குற்றத்திற்கு எதிராக செயற்படுவதற்கு நீதிமன்ற நிறுவன சட்டத்தின் 9வது பிரிவில் உள்ள விதிகளின்படி இலங்கை நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது.
இதற்கு ஏற்பவே இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
தென்கொரியாவில் என்ன நடந்தது?
தென்கொரியாவின் டேகூ பிராந்தியத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் 1998ம் ஆண்டு, 18 வயது இளம் பெண் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இது குறித்து விசாரணை நடத்தி தென்கொரிய போலீசார் நீதிமன்றில் அறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.
உயிரிந்த இளம் பெண்ணின் உள்ளாடையில் காணப்பட்ட விந்து கறைகள் குறித்து போலீசாரின் கவனம் திரும்பியது.
இதுகுறித்து மரபணு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கூட்டு வன்புணர்வின் பின்னரே இளம் பெண் உயிரிழந்துள்ளது விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
எனினும், இந்த விந்து மாதிரிகளுக்குரிய சந்தேக நபர் யார் என்பது குறித்து தெரிய வரவில்லை. இதனால் விந்து மாதிரிகளை போலீசார் பாதுகாத்து வைத்தனர்.
குற்றவாளி சிக்கியது எப்படி?
பின்னர் 2010ம் ஆண்டு தென்கொரியாவில் சிறுமி ஒருவரிடம் பாலுறவை லஞ்சமாக கோரியதாக குற்றம் சுமத்தப்பட்டு இலங்கையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்தவரின் விந்து மாதிரியை போலீசார் சோதனை செய்தனர்.
ஏற்கனவே 1998ஆம் ஆண்டு உயிரிழந்த பெண்ணின் சடலத்தில் இருந்து பெறப்பட்ட விந்து மாதிரியை இதனுடன் போலீசார் ஒப்பிட்டுள்ளனர்.
இதன் மூலம் இரண்டும் ஒரே தன்மையை கொண்டிருப்பதை போலீசார் உறுதிசெய்துள்ளனர்.
இலங்கையில் ஒருவர் குற்றவாளியாக காணப்பட்டால் அவரது கைரேகை அடையாளம் பெறும் நடைமுறை இருக்கிறது.
தென்கொரியாவில் மரபணு பெறும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இவ்வாறு பெறப்பட்ட மரபணுவின் மூலம் இரண்டு குற்றங்களையும் புரிந்தவர் ஒரே நபர் என்பதை தென்கொரிய போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் பின்னர், தென்கொரிய போலீசாரினால் சந்தேக நபர் மீது, 1998ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
எனினும், தென் கொரிய நாட்டு சட்டத்தின்படி 10 வருடங்கள் கடந்த பாலியல் வன்புணர்வு குற்றம் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது எனக் கூறி விசாரணைக் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சந்தேக நபரும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும், 1998ஆம் ஆண்டு கொல்லப்பட்ட தென்கொரிய பெண்ணின் பெற்றோர் வழக்கைத் தொடர முடிவெடுத்தனர்.
தென் கொரிய அரசாங்கத்தின் கோரிக்கை
தென் கொரிய பெண் கூட்டுப் பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை குறித்து விசாரணை நடத்துமாறு கொரிய ராஜீய பிரதிநிதிகள் சிலர் கடந்த மே மாதம் 30ம் தேதி இலங்கைக்கு வந்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சட்டமா அதிபர், நீதியமைச்சின் உயர் அதிகாரிகள், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆகியோரை கொரிய அதிகாரிகள் சந்தித்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்த்தில் அறிவித்தனர்.
சிறுமியாக இருந்தபோது வன்புணர்வு செய்தவரை, போலீசாகி சிறையில் அடைத்த பெண்
மரண தண்டனை விதிப்பது பாலியல் குற்றங்களை தடுக்குமா?
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு கொரிய அரசாங்கம், கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி இலங்கை அதிகாரிகளிடம் ராஜீய மட்டத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சட்டமா அபதிர், சர்வதேச போலீஸ் பிரிவு, தென்கொரிய அதிகாரிகள் ஆகியோர், இந்த விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சிலர், கொரியாவிற்குச் சென்றும் விசாரணை நடத்தியுள்ளனர். குற்றம் நடந்த இடத்திற்கு சென்ற விசாரணை அதிகாரிகள், கொரியாவில் பணிபுரிந்த மேலும் இரண்டு இலங்கையருக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருந்ததை கண்டறிந்தனர்.
தென்கொரியாவில் பணிபுரிந்த இந்த மூன்று இலங்கையரும் நாடு திரும்பியுள்ளதாகவும், இவர்கள் குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சர்வதேச போலீஸ் பிரிவினர், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான தேடுதலை ஆரம்பித்துள்ளதாக நீதிமன்றத்தில் அறிவித்தனர்.
கொரியாவில் பணிபுரிந்த இந்த மூன்று இலங்கையர்களும் இலங்கை திரும்பியுள்ளதாகவும், இவர்கள் குறித்த விபரங்களை நீதிமன்றில் சமர்ப்பிப்பதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த மூன்று சந்தேக நபர்களின் பெயர் விபரங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இரகசியமாக வைத்துள்ளனர்.