இலங்கை படையினர் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தினர்- யஸ்மின் சூக்கா மீண்டும்
30 Sep,2018
இலங்கையில் முன்னர் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணிவெடிகளைஅகற்றுபவர்கள் கொத்துக்குண்டுகளின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளமை குறித்து இலங்கை விளக்கமளிக்கவேண்டும் என சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மின் சூக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொத்துக்குண்டுகள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் குறித்த அமைப்பின் தலைமைப்பொறுப்பை இலங்கை பொறுப்பேற்றுள்ளதன்( Convention on Cluster Munitions0 காரணமாக இலங்கை தனது நாட்டில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைப்பது குறித்து தெளிவுபடுத்தவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணத்தில் பொதுமக்களிற்கான பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதியில் பெருமளவில் காணப்பட்ட மக்கள் மத்தியில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை அனைத்து ஆதாரங்களும் உறுதி செய்கின்றன என சர்வதேச நீதி மற்றும் உண்மைக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளார் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
இலங்கை படையினர் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ள அவர் 2016 இல் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரே இதற்கான சுயாதீன சர்வதேச விசாரணையை கோரியிருந்தார் எனினும் அது நடைபெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தடைசெய்யப்பட்ட ஆயுதத்தினை முற்றாக ஒழிப்பதற்காக குரல்கொடுக்கும் அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கை அதன் கடந்த காலத்தை மறைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகளிற்கும் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் அமைப்புகளிற்கும் பணியாற்றியுள்ள தமிழர்கள் தாங்கள் நேரடியாக கிளஸ்டர் குண்டுகளை பார்த்ததாக தெரிவித்துள்ளனர் என யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற பகுதியில் பணியாற்றிய மருத்துவர்கள் பெண்ணொருவரின் காலில் இருந்து கிளஸ்டர் குண்டுகளின் சிதறல்களை அகற்றியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் யுத்தத்தின் பின்னர் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் பல பகுதிகளில் கொத்துக்குண்டுகளின் சிதறல்களை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இராணுவத்தினர் அந்;த பகுதிகளை சுற்றிவளைத்துள்ளதுடன் பொதுமக்கள் அங்கு செல்வதை தடை செய்துள்ளனர் எனவும் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தான் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தியதை மறுத்துவருவதன் மூலம் அதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கும் அவர்களது குடும்பத்தவர்களிற்கும் அவமரியாதை செய்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.