இலங்கைக்கு அமெரிக்கா 8000 கோடி ரூபா நிதியுதவி
25 Sep,2018
ஐக்கிய அமெரிக்காவின் மில்லேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை அதாவது சுமார் 8000 கோடி ரூபா நிதியுதவியை இலங்கையின் அபிவிருத்தி பணிகளுக்காக வழங்க முன்வந்துள்ளதாக அக் கூட்டுத்தாபனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி Brock Bierman தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 73வது பொதுச்சபை அமர்வில் உரையாற்றுவதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நேற்று பிற்பகல் சந்தித்தபோதே மில்லேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நிதியுதவியை வழங்குவதற்கான வரைவு ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதுடன், விரைவில் அதனை அமெரிக்க செனட் சபையின் அனுமதிக்காக முன்வைக்கவுள்ளதாகவும் Brock Bierman தெரிவித்தார்.
செனட் சபையின் அனுமதியை பெற்றுக்கொண்டதன் பின்னர் எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் கொழும்பில் குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர், அச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் பங்குபற்றுவாராயின் தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.
அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் நீண்ட காலமாக இலங்கைக்கு வழங்கிவரும் அபிவிருத்தி உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் இந்த நிதியுதவி தொடர்பில் பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை பயணிகள் போக்குவரத்து சேவையின் அபிவிருத்திக்கும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குமான புதிய செயற்திட்டமொன்றை அமுல்படுத்த குறித்த நிதியை முதலீடு செய்ய எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர்கள் பாட்டலி சம்பிக்க ரணவக்க, திலக் மாரப்பன ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்