பொன்சேகாவிடம் இன்று விசாரணை
24 Sep,2018
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சரத் பொன்சேகாவிடம் இன்று விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளனர்.
ஏற்கனவே, சரத் பொன்சேகாவிடமும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோரிடமும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில், சரத் பொன்சேகாவிடம் மீண்டும் இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது.
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் தலைமையில் செயற்பட்ட சிறப்பு அணி ஒன்றே ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக, சரத் பொன்சேகா முன்னர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.