அமெரிக்க தடைக்கு பயந்து ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது சிறிலங்கா
22 Sep,2018
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகளை அடுத்து, ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை சிறிலங்கா நிறுத்தியுள்ளது.
அபுதாபியில் இருந்து வெளியாகும் ‘தி நேசன்’ நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியில், சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
“ஈரானுக்கு எதிராக அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்தவுடன், நாங்கள், ஈரானிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதை நிறுத்தி விட்டோம்.
நாங்கள் ஈரானிடம் நேரடியாக எண்ணெய் வாங்கவில்லை. சிங்கப்பூர், டுபாய், புஜாரா ஊடாகவே பெற்று வந்தோம்.
அடுத்த சில மாதங்களில், அரசுகளுக்கு இடையிலான உடன்பாடுகளை செய்து கொள்வதற்கு எதிர்பார்க்கிறோம்.
ஈரானிடம் எண்ணெய் கொள்வனவு செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மாற்று வழிகளை அடையாளம் கண்டுள்ளோம்.
ஏற்கனவே, அவற்றைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளோம். ஆனால் ஒரு பிரச்சினை, இந்த மசகு எண்ணெய் விலை அதிகமானது. எனவே மலிவான மசகு எண்ணெயை பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கிறோம்.” என்றும் குறிப்பிட்டார்.
எனினும். தற்போது எங்கிருந்து மசகு எண்ணெயை சிறிலங்கா பெற்றுக் கொள்கிறது என்ற தகவலை அவர் வெளியிட மறுத்து விட்டார்.
ஈரானிடம் இருந்து நாளாந்தம், 50 ஆயிரம் பீப்பாய், மசகு எண்ணெயை சிறிலங்கா கொள்வனவு செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.