நிமால் சிறிபால சொன்னதை கேட்டதும் மோடியின் முகம் மாறியது”
22 Sep,2018
“
இந்திய பிரதமருடனான சந்திப்பு தொடர்பில் தேசிய சகவாழ்வு, அரச கருமமொழிகள் மற்றும் தேசிய நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசனின் விசேட செவ்வி .
அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அண்மையில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து விட்டு வந்துள்ளனர். இதில் தமிழ் பேசும் தலைவர்களான சம்பந்தன் மனோ கணேசன் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில் இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பில் என்ன விடயங்கள் பேசப்பட்டன என்பது குறித்து அறிய வேண்டிய தேவை தமிழ் பேசும் மக்களுக்கு இருக்கின்றது. குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானது என்ற கருத்து மக்கள் மத்தியில் உள்ளதால் மோடி இந்தசந்திப்பில் என்ன கூறினார் என்பது அறியப்படவேண்டும்.
எனவே இந்திய பிரதமர் மோடி உள்ளிட்டவர்களுடனான சந்திப்பு மற்றும் இந்திய விஜயம் தொடர்பில் இந்தியாவுக்கு சென்ற தூதுக்குழுவில் இடம்பெற்ற தேசிய சகவாழ்வு, அரச கருமமொழிகள் தேசிய நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசனை சந்தித்து
அவரது அமைச்சில் உரையாடினேன். இதன்போது கேசரி நாளிதழுக்கு வழங்கிய விடேச செவ்வியின் விபரம் வருமாறு:
கேள்வி: இந்திய விஜயத்தின் போது இடம்பெற்ற பாரதப்பிரதமர் நரேந்திரமோடியுடனான சந்திப்பு எவ்வாறு அமைந்தது?
பதில்: இந்தியாவின் அழைப்பின்பேரில் இலங்கையின் சர்வகட்சி பாராளுமன்றக்குழு அங்கு விஜயம் செய்தது. அதன் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரிய செயற்பட்டார். கூட்டு எதிரணியின் பிரதிநிதி இதில் பங்கேற்கவில்லை. மோடியுடனான சந்திப்பின்போது அனைத்துக்கட்சியினதும் பிரதிநிதிகள் தமது கருத்துக்களை கூறினார்கள். அவர் அவற்றை செவிமடுத்தார்.
நானும் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தனும் ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக அதிகளவில் பிரஸ்தாபித்தோம். சகோதர இனப்பிரதிநிதிகள் அபிவிருத்தி குறித்தும் இருதரப்பு உறவு குறித்தும் பேசினார்கள். அதனை எம்மால் புரிந்துகொள்ள முடிந்தது.
சம்பந்தன் கருத்து வெளியிடுகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தினார். நான் கருத்து வெளியிடுகையில் புதிய அரசியலமைப்பு முக்கியமானது என்று கூறியதுடன் மற்றுமொரு விடயத்தை சுட்டிக்காட்டினேன். அதாவது தற்போது அரசியலமைப்பில் காணப்படும் 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமெனக் கூறினேன். இதற்காக இந்திய அரசாங்கத்திற்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் குழந்தையாக 13 ஆவது திருத்த சட்டமும் அதன் குழந்தையாக மாகாணசபை முறைமையும் காணப்படுகின்றது.
இதன் மூலம் இந்தியாவிற்கு பொறுப்பு இருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டினேன். அத்துடன் எந்தவொரு தீர்வுத்திட்டமும் 13 இலிருந்து முன்னோக்கி நகரவேண்டுமே தவிர பின்நோக்கி நகரக்கூடாது என்பதை சுட்டிக்காட்டினேன். அதில் இந்தியா அக்கறைகொள்ளவேண்டும் என்று கூறினேன்.
கேள்வி: மோடியுடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்ததா?
பதில்: பொதுவாகவே நான் எந்தவொரு விடயத்திலும் திருப்தியடையமாட்டேன் திருப்தி அடைந்துவிட்டால் அத்துடன் அந்த விடயம் முடிவடைந்துவிடும். எனவே எதிர்பார்ப்புக்களை குறைத்துக்கொள்ளவேண்டும். அந்த அடிப்படையில் இந்த சந்திப்பு திருப்திகரமானது என்று நான் கூறமாட்டேன். ஆனால் முன்னோக்கிய எமது நகர்வுகளில் இதனை ஒரு மைல்கல் என்று கூறமுடியும்.
கேள்வி: அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் நரேந்திரமோடியின் பார்வை எவ்வாறு அமைந்தது?
பதில்: இந்தப் பேச்சுவார்த்தையின் போது நாங்கள் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேசும் போது இந்தியப் பிரதமர் எந்தக்கருத்தையும் தெரிவிக்கவில்லை நாம் கூறியவற்றை அமைதியாக செவிமடுத்துக்கொண்டிருந்தார். நாங்கள் கருத்துக்களை கூறி முடிந்தவுடன் சந்திப்புக்களில் சம்பிரதாயமாக கூறும் வார்த்தைகளையே இந்தியப் பிரதமர் கூறினார். இலங்கை, இந்தியாவுக்கிடையிலான பாரம்பரிய உறவை சுட்டிக்காட்டினார். ஒருகட்டத்தில் சம்பந்தன் 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மோடிக்கு இதுவரை தாம் தொல்லை கொடுக்கவில்லை என்றும் எனினும் தற்போது தீர்க்கமாக கட்டத்தில் இருப்பதால் தொல்லை கொடுப்பதாக தெரிவித்தார். அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி இல்லை இல்லை என்னைத் தொல்லைப்படுத்துவதற்கு முழுமையான உரிமை உங்களுக்கு இருக்கிறது என்று கூறினார். எனக்குத் தொல்லை கொடுங்கள் என்று சிரித்தபடியே கூறினார்.
கேள்வி: இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதை நீங்கள் நம்புகின்றீர்கள் தானே?
பதில்: ஆம் இருக்கின்றது என்றும் இருக்கவேண்டும் என்றும் நம்புகின்றேன்.
கேள்வி: அப்படியாயின் பாரதத்தின் தலைவரை சந்தித்தபோது இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அவரின் செவிசாய்ப்பும் அவரின் பிரதிபலிப்பும் உங்களுக்கு திருப்திகரமாக அமைந்ததா?
பதில்: திருப்தி இல்லை என்று நான் ஏற்கனவே கூறிவிட்டேன். திருப்தி இல்லைதான். ஆனால் எமது முன்னோக்கிய நகர்வில் இது ஒரு மைல்கல்லாகும். எப்போதாவது நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்பவன் நான்.
கேள்வி: முக்கியமான மூன்று தமிழ் தலைவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தீர்கள். இந்த சந்திப்பில் தீர்வுத்திட்டத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகவோ அல்லது தீர்வுத்திட்டம் தொடர்பாகவோ பாரத பிரதமர் எதனையும் தெரிவிக்கவில்லை என்பதை உங்கள் பதில்களிலிருந்து நான் புரிந்துகொள்கின்றேன்.
பதில்: ஆம் அவர் எதுவும் சொல்லவில்லை. அவர் சொல்லாதது எதையும் சொன்னதாக நான் கூற முடியாது.
கேள்வி: அது உங்களுக்கு ஏமாற்றமாக இல்லையா?
பதில்: ஏமாற்றமாகத்தான் இருந்தது.
கேள்வி: என்னுடைய கேள்விகளுக்கு திருப்தியளிக்கும் பதில்களை நீங்கள் தரவேண்டியதில்லை. சரியானதை கூறுங்கள்?
பதில்: உங்களை திருப்திப்படுத்த நான் போராடவில்லை. நான் பதில் கூறும்போது அது எனக்கு திருப்தியானதாக இருக்கின்றதா என்பதை பார்க்கின்றேன். இது சம்பந்தன் தலைமையிலானக கூட்டமைப்பின் விஜயமல்ல. அத்துடன் மனோ கணேசன் தலைமையிலான குழுவோ, அல்லது டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவோ அல்ல. அத்துடன் தமிழ் கட்சிகளின் தூதுக்குழுவும் அல்ல. மாறாக பல கட்சிகள் அங்கே இருந்தன. எனவே பல கட்சிகள் இருந்ததால் இந்தியப் பிரதமர் சிலவேளை சொல்லவந்ததைக்கூட சொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் எங்கள் தரப்பில் சொல்லவந்ததை சரியாக கூறிவிட்டோம். நான் அந்த சந்திப்பில் பேசிய விடயங்களையிட்டு திருப்தியடைகின்றேன்.
கேள்வி: இந்த சந்திப்பில் 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த இந்தியா அழுத்தம் வெளியிடவேண்டுமென நீங்கள் கூறியிருக்கின்றீர்கள்.
பதில்: 13ஐ முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென்று கூறினேன். அதேபோன்று 13 இலிருந்து முன்னோக்கி செல்ல வேண்டும் என்றும் கூறினேன்.
கேள்வி அப்படியானால் இனப்பிரச்சினை தீர்வுடன் கூடிய புதிய அரசியலமைப்பு வராது என்று எண்ணுகின்றீர்களா?
பதில் ஆம். இதனை நான் பலமுறை கூறியிருக்கிறேன். அவ்வாறு நான் கூறுவதை புதிய அரசியலமைப்பு வரக்கூடாது என நான் கூறுவதாக சிலர் திரிபுபடுத்துகின்றனர். புதிய அரசியலமைப்பு வரவேண்டும் என்பதில் எனக்கு பாரிய அக்கறை இருக்கிறது. ஆனால் மக்களுக்கு போலியான நம்பிக்கையை கூறாமல் உண்மையை கூறவேண்டும். அவர்களையும் ஏமாற்றி எங்களையும் ஏமாற்றிக்கொள்ளும் அரசியலில் எனக்கு உடன்பாடு கிடையாது. புதிய அரசியலமைப்பு வருவதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவு. இந்த ஆட்சி வந்து முதல் ஒருவருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை கொண்டுவந்திருக்கவேண்டும். அதை நாங்கள் தவறிவிட்டோம். அதற்கான பொறுப்பை நானும் ஏற்றுக்கொள்கின்றேன். நான் நேரடியாக அதில் சம்பந்தப்படாவிடினும் கூட்டுப்பொறுப்பு என்றடிப்படையில் ஏற்றுக்கொள்கின்றேன். இப்போது கடைசி ஒருவருடத்தில் இருக்கின்றோம். எனவே தற்போது புதிய அரசியலமைப்பு கொண்டுவருவது என்பது கஷ்டம். அதை செய்ய முடிந்தால் சந்தோஷப்படுவேன்.
வழிகாட்டல் குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருக்கின்றோம். அது அரசியலமைப்பல்ல. அது நிபுணர் குழுவின் அறிக்கையாகும். அதனை மக்களுக்கு உங்கள் ஊடகம் தெளிவுபடுத்தவேண்டும். இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்லவேண்டும். இவையெல்லாம் இந்தகாலகட்டத்தில் சாத்தியமானதாக தெரியவில்லை. ஆனால் நான் சொல்வது தவறிவிடவேண்டுமென நான் வேண்டுகின்றேன்.
கேள்வி: மலையக மக்களின் வீட்டுப்பிரச்சினை தொடர்பில் மோடியுடன் பேசினீர்களா?
பதில்: நிச்சயமாக பல விடயங்களை பிரஸ்தாபித்தேன். மலையக மக்கள் விடயத்தில் மோடி அரசு கூடி அக்கறை காட்டுகிறது என்பதையும் எடுத்துக்கூறினேன். மகடந்த காலத்தைவிட அதிகளவு வீடுகளை கட்டிகொடுக்க இந்திய அரசு முன்வந்துள்ளது என்பதையும் நினைவுபடுத்தி மலையக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்தேன். கடந்த முறை மோடி இலங்கை வந்தபோது நாம் நுவரெலியாவில் நடத்திய கூட்டம் தொடர்பில் நினைவுபடுத்தினேன். அது தனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது என்று மோடி கூறினார்.
அதனை எப்படி மறக்க முடியும் என்றும் கேட்டார். அந்தக்கூட்டம் தன்னைப் பரவசப்படுத்தியதாகவும் கூறினார். அத்துடன் இந்த இந்திய வீட்டுத்திட்டம் இன்னும் விரிவுபடுத்தப்படவேண்டும் என்றும் விரைவுபடுத்தப்படவேண்டுமென்றும் நான் கூறினேன். அத்துடன் இந்திய அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சின் ஊடாக சிறிய வர்த்தக அபிவிருத்தி திட்டம் என்ற ஒரு திட்டம் இருக்கிறது. அதனூடாக இலங்கை பல திட்டங்கள் ஏற்படுத்தப்படவிருக்கின்றன. ஏனைய திட்டங்கள் போலன்றி இதனை விரைவாக செய்ய முடியும். இதனூடாக மலையகத்தின் கல்வி மற்றும் கலாசார அபிவிருத்தி திட்டங்கள் முன்வைக்கவேண்டுமென் கோரிக்கை விடுத்தேன். இதனை இந்தியா வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவாராஜிடமும் கூறினேன். இதற்கு இந்தியத் தலைவர்களின் பதில் சாதகமாகவே இருந்தது.
கேள்வி: பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றனவா?
பதில்: ஆம் அதுதொடர்பிலும் பேசப்பட்டது. அந்தத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எங்கள் தூதுக்குழுவில் இடம்பெற்றிருந்தார். பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பாக இந்தியாவின் பங்களிப்பு அவ்வளவு அவசியமில்லை என்பது போன்றே அமைச்சர் நிமாலின் கருத்து இருந்தது.
அதாவது பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பான நிதிப்பிரச்சினையை நாங்கள் சமாளித்துவிட்டோம். எனது அமைச்சுக்கும் பட்ஜட் நிதி கிடைத்திருக்கின்றது. சுற்றுலாத்துறை அமைச்சும் நிதி ஒதுக்கித் தந்திருக்கின்றது. எனவே நாம் அதனை முன்னெடுக்கின்றோம் என்று அமைச்சர் கூறிய கருத்தானது உங்கள் பங்களிப்பு இதற்கு அவசியமில்லை என்று கூறுவதுபோன்று எனக்குப்பட்டது. அந்தக்கருத்தை அமைச்சர் நிமல் தெரிவித்தபோது இந்தியப் பிரதமர், வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டோரின் முகங்களில் அதற்குரிய பிரதிபலிப்பு இருந்ததை நான் கண்டேன். அந்த சந்திப்பு முடிந்ததன் பின்னர் இது தொடர்பில் நான் அமைச்சர் நிமாலிடம் வினவினேன்.
அதற்கு அவர் பலாலி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் அதில் நாங்கள் இந்தியாவை உள்வாங்கினால் தேவையற்ற பிரச்சினைகள் வரும் என்று அவர் எனக்கு பதிலளித்தார். அதனை நான் உடனடியாக மறுதலித்தேன். இந்தியா பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய அக்கறைகாட்டி வந்திருக்கின்றது. எதிர்காலத்தில் சென்னை, திருச்சி, மதுரைக்கு விமான சேவை இடம்பெறவேண்டுமென நாங்கள் விரும்புகின்றோம் என்று கூறினேன். ஆனால் அதற்கு அமைச்சர் நிமல் எனக்கு பதிலளிக்கவில்லை. அத்துடன் இந்திய உதவியுடன் பலாலி விமான நிலையம் விஸ்தரிக்கப்படவேண்டுமென்பதை டக்ளஸ் தேவானந்தவும் எடுத்துக்கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நான் இரத்தினபுரியிலிருந்து பிரதமருடன் கொழும்புக்கு ஹெலிகொப்டரில் வந்தேன். அப்போது இந்த பலாலி விமான நிலைய விவகாரத்தை அவரிடம் எடுத்துக்கூறினேன். அதனை பிரதமர் சிரித்தவாறு கேட்டுக்கொண்டிருந்தார். பிரதமர் அடுத்தவாரம் இந்தியா செல்லவிருக்கின்றார். இது தொடர்பில் கேள்வி எழுப்பப்படலாம். பதிலளிக்க தயாராகுங்கள் என்று கூறினேன். மேலும் விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பான வரைபடத்தை இலங்கையே தயாரிக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சிலவேளை அதனை நிமல் சிறிபால டி சில்வா அந்த அர்த்தத்தில் கூறியிருக்கலாம் என்றும் பிரதமர் என்னிடம் கூறினார்.
கேள்வி இந்தியா யுத்தத்துக்கு ஆதரவளித்ததாக மஹிந்தவின் முன்னைய அரசாங்கம் தெரிவித்தது. ஆனால் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கு இந்தியா பங்களிப்பு செய்ததாக குற்றமும் சாட்டப்பட்டது. தற்போது மீண்டும் இந்தியா மஹிந்த தரப்பை அழைத்து பேச்சு நடத்தியுள்ளது. இதனை எவ்வாறு நோக்குகின்றீர்கள்?
பதில் இதனை நான் ஆச்சரியமாக பார்க்கவில்லை. இந்த விடயங்களை அனுபவத்துடன் நிதானமாக பார்க்கின்றேன். இந்தியா எப்போதுமே தனது நலனை கருத்திற்கொண்டு செயற்படுகின்றது. இலங்கைக்கு தனது நலன் மற்றும் தமிழர்களுக்கு அவர்கள் நலன் அமெரிக்க நலன் என செயற்படுகின்றது. இந்தியா தமிழர்களின் நலனை மட்டும் முதன்மைபடுத்தி செயற்படாது. அதேபோன்று தமிழர்களாகிய நாங்கள் இந்திய நலனை முதன்மைபடுத்தி செயற்படமாட்டோம். இந்தியாவை நட்பு நாடாக கருதும் அதேவேளை இங்கே வாழ்ந்துகொண்டிருக்கும் சிங்கள முஸ்லிம் மக்களுடன் பின்னி பிணைந்திருக்கவேண்டும். அப்படி பார்த்தால் ஏமாற்றப்படுகின்றவர்கள் யாரும் இல்லை.
1980 களில் இலங்கையில் இருந்த அரசுக்கு இந்திய அரசுடன் முரண்பாடு ஏற்பட்டது. அப்போது இலங்கை அரசுக்கு பாடம் கற்பிக்கும் இருந்தது. அதேவேளை அன்று போராடிக்கொண்டிருந்த தமிழர்களுக்கு ஒரு நட்புக்கரம் தேவைப்பட்டது. ஆக தமிழர்களின் நலனும் இந்திய நலனும் ஒரு நேர் புள்ளியில் சந்தித்தன. அதனை இரண்டு தரப்பினரும் பயன்படுத்திக்கொண்டனர். ஆனால் அவ்வாறு செய்த இந்தியா இலங்கையில் வடக்கையும் கிழக்கையும் தமிழீழமாக பெற்றுக்கொடுக்கும் என்று சில முட்டாள்கள் அன்று நினைத்தனர். அது தவறாகும். இந்தியா ஒருபோதும் இலங்கையில் ஈழத்தை உருவாக்கி தராது.ஒருவேளை இலங்கையில் சிங்கள மக்களே முன்வந்து பிழைத்துப்போங்கள் என்று ஈழத்தைக்கொடுத்தாலும் அதனை இந்தியா விடாது.
எமது இந்திய விஜயத்தின்போது இந்திய சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எங்களுக்கு விருந்து அளித்தார். அதில் இந்திய வீடமைப்புத்துறை அமைச்சர் ஹரேந்திர பூரி கலந்துகொண்டிருந்தார். அவர்தான் 198 களில் டிக்ஷித் இலங்கைக்கான இந்திய தூதுவராக இருந்தபோது இந்த ஹரேந்திர பூரிதான் அரசியல் செயலாளராக இருந்தார். அவர் எங்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார். அக்காலத்தில் டிக்ஷித் ஜே.ஆரை கையாள்வது என்றும் பிரபாகரனை பூரி கையாள்வது என்று பிரித்து செயற்பட்டுள்ளார்கள். அந்த பூரி தான் பலாலிலியிருந்து விமானம் மூலமாக பிரபாகரனை சென்னைக்கு அழைத்து சென்றிருந்தார். நாங்கள் இம்முறை டில்லியில் அசோக் ஹோட்டலில் தங்கியிருந்தோம். அங்குதான் அன்று புலிகளின் தலைவர் பிரபாகரனும் தங்கியிருந்தார். அதனை பூரி ஞாபகப்படுத்தினார்.
அன்று தான் சிறைவைக்கப்பட்டிருந்தாக பிரபாகரன் கூறியது தவறானது என்றும் பூரி கூறினார். காரணம் பிரபாகரன் அந்த ஹோட்டல் அறையில் தங்கியிருந்தபோது இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் இருந்தாகவும் அவர் அறையிலிருந்து வேறு நாடுகளுக்கு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார் என்றும் கூறிய பூரி சிறைவைக்கப்பட்டால் அவ்வாறு தொலைபேசியில் உரையாட சந்தர்ப்பம் கிடைக்குமா என்றும் கேள்வியெழுப்பினார். அங்கேதான் ராஜிவ் காந்தியும் அவரது அதிகாரிகளும் பிரபாகரனை சந்தித்தார்களாம். ஒரு கட்டத்தில் பிரபாகரன் வடக்கு கிழக்கை தனிநாடாக தரவேண்டும் என்று பூரியிடம் கோரினாராம். அதனை மறுத்ததாகவும் அவ்வாறு செய்தால் தமிழ்நாடும் தனிநாட்டை கோருமே என்றும் பூரி பிரபாகரனிடம் கூறினாராம். அதனை பிரபாகரன் ஏற்றுக்கொண்டாராம். அத்துடன் வடக்கு கிழக்கு இடைக்கால நிர்வாகததில் பெரிய பங்கை தரவேண்டும் என்று பிரபாகரன் கூறினார்.
அதற்கு இணக்கமும் காணப்பட்டது என்றும் ஒரு பொன்னான வாய்ப்பு இழக்கப்பட்டதாகவும் பூரி எங்களிடம் வருத்தம் தெரிவித்தார்.
கேள்வி அண்மையில் வடக்கில் வீடமைப்பை முன்னெடுக்க தமிழ்க் கூட்டமைப்பு இடமளிக்காமல் உள்ளது என்று குற்றம் சாட்டியிருந்தீர்கள். அதன் தற்போதைய நி்லைமை எவ்வாறு உள்ளது?
பதில் நான் குற்றம் சாட்டவில்லை. அவ்வாறான ஒரு விடயத்தை வெ ளியில் சொல்லும் நிலைமையை ஏற்படுத்திவிட்டார்கள். எனது அமைச்சின் 39 ஆவது நடமாடும் சேவை முல்லைத்தீவில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட கூட்டமைப்பு எம்.பி. ஒருவர் என்மீதும் அரசாங்கம் மீதும் காரசாரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அவரின் குற்றச்சாட்டுக்களில் உண்மைகள் இருந்திருக்கலாம். நானேதான் இந்த அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றேன்.
அந்த வகையில் கூட்டமைப்பு எம்.பி வீடு கட்டுதல் தொடர்பாக முன்வைத்த குற்றச்சாட்டுக்கு நான் பதிலளிக்க வேண்டி ஏற்பட்டது. அப்போது நான் எனக்கு அந்த பொறுப்பு கிடையாது என்று கூறினேன். அந்த பொறுப்பு சில மாதங்களுக்கு முன்னர் தான் எனக்கு கிடைத்தது. கடந்த மூன்று வருடங்களாக அது வேறொரு அமைச்சரிடம் இருந்தது.
எனினும் வீடு கட்டாமை தாெடர்பில் மன்னிப்பும் கேட்டும் கொண்டேன். எனினும் நான் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் தரைக்கு வந்து பணியை செய்ய முற்படும் போது அதற்கு ஒரு தடை வந்து விட்டது. அதாவது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் வீடு கட்டும் பொறுப்பை என்னிடம் இருந்து அகற்றுமாறு கோரியிருந்தார். எனவே தாமதத்திற்கு நான் பொறுப்பல்ல. கூட்டமைப்பும் பொறுப்பு கூற வேண்டும் என நான் கூறினேன்.
கேள்வி - அப்படியானால் வடக்கு வீடமைப்பு திட்டத்தின் தற்போதைய நிலைமை என்ன?
பதில் - அதன் பின்னர் அலரிமாளிகையில் பிரதமர் தலைமையில் இந்த வீடமைப்பு விவகாரம் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் நானும் சுவாமிநாதனும் கூட்டமைப்பின் எம்.பி சுமந்திரனும் கலந்து கொண்டோம். பிரதமர் ஆலோசகர் பாஸ்கரலிங்கம் வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணியின் செயலாளர் சிவஞானசோதி பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர். அதில் வீடு கட்டும் பொறுப்பு எனக்கும் அமைச்சர் சுவாமிநாதனுக்கும் பிரித்து கொடுக்க்படப்பட்டது.
நான் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கவுள்ளேன். அதில் முதற்கட்டமாக 25 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படும். அந்த கூட்டத்தில் கூட அனைத்து வீடுகளையும் பிரதமர் தலைமையிலேயே நிர்மாணிக்க வேண்டும் என்ற யோசனை கூட்டமைப்பின் சார்பில் முன்வைக்கப்பட்டது. அதற்கு நான் உடன் மறுப்பு தெரிவித்தேன். அனைத்து விடயங்களையும் பிரதமர் தலையில் போட முடியாது. அப்படி எல்லாவற்றையும் பிரதமர் தலைமையில் போட்டால் அமைச்சரவை தேவையில்லை. இது அரசாங்கத்தின் செயற்பாடு. இதில் நீங்கள் தலையிட முடியாது என்று கூட்டமைப்பின் பிரதிநிதிக்கு கூறிவிட்டேன்.
நாளை பாராளுமன்றத்தில் நீங்களே வீடமைப்பு தொடர்பில் கேள்வி எழுப்பினால் பதிலளிப்பதற்கு அமைச்சர் இருக்க வேண்டும். அதனால்தான் கூட்டமைப்பினை அரசாங்கத்தில் இணையுமாறு கூறினேன். அவ்வாறு அரசாங்கத்துடன் இணைந்தால் என்னுடைய அமைச்சை கொடுக்கவும் தயராக உள்ளேன். மாறாக எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அரசாங்கத்தின் செயற்பாட்டில் தலையிட வேண்டாம் என நான் கூறினேன். உடனடியாக அங்கு இருந்தவர்கள் நான் கூறியது சரியென்று தெரிவித்தனர்.
நேர்கண்டவர் - ரொபட் அன்டனி