பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவிடம் வழங்கப்படாது’
19 Sep,2018
தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவிடம் வழங்கப்படாது என்றும், அதனை விமானப்படையே முன்னெடுக்கும் என்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கூட்டு எதிரணி உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பியிருந்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பலாலி விமான நிலைய அபிவிருத்தி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா என்ற விமல் வீரவன்சவின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், நிமல் சிறிபால டி சில்வா,
“அவ்வாறு எந்த திட்டமும் இல்லை, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படாது.
விமானப்படையின் உதவியுடனேயே புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பாக, பிரதமரும் நானும் தீர்மானம் எடுத்து விட்டோம்.
தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டே, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி விமானப்படைக்கு வழங்கப்படுகிறது.” என்று கூறினார்.