முல்லைத்தீவு சிங்களக் குடியேற்றம்- கூட்டமைப்பின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறது சிறிலங்கா அரசு
30 Aug,2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளியிடங்களைச் சேர்ந்தவர்களைக் குடியேற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாf, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுமத்திய குற்றம்சாட்டை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான அதிபர் செயலணிக் கூட்டத்தில் முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிய குற்றச்சாட்டுக்கு, சிறிலங்கா அதிபரும், அமைச்சர்களும் பதிலளிக்காமல் இருந்தமை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் மகிந்த சமரசிங்க, “ இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தப் பிரச்சினையை எழுப்பியதும், சிறிலங்கா அதிபர் உடனடியாக, அந்தப் பிரதேசத்தில் திட்டங்களுக்கு பொறுப்பான மூத்த அதிகாரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
நிலைமைகள் குறித்து கேட்டறிந்தார். அந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும் அவர் கூறினார். கூட்டமைப்பின் கரிசனைக்கு அந்த இடத்திலேயே பதிலளிக்கப்பட்டது.” என்று தெரிவித்துள்ளார்.