விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைக்கு உதவியவர் வாஜ்பாய் - ரணில் விக்கிரமசிங்கே
19 Aug,2018
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்ற
அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் பதிவேட்டில் கையொப்பமிட்டார்.
அதைத்தொடர்ந்து, வாஜ்பாய் குறித்த நினைவலைகளை பகிர்ந்துகொண்ட ரணில், இலங்கையின் உண்மையான நண்பராக
இருந்த வாஜ்பாய், இந்தியாவை ஆண்ட சிறந்த பிரதமர்களில் ஒருவர் என தெரிவித்தார்.
மேலும், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-
இலங்கையின் பிரதமராக நான் இருந்த சமயம் விடுதலை புலிகள் மிகவும் பலம் பொருந்தியவர்களாக இருந்தனர். அப்போது, இலங்கையின் பொருளாதரம் மிகவும் பலவீனமாக இருந்தது.
எனினும், இலங்கையின் பொருளாதாரத்தை வளர்ச்சியை நோக்கி மீட்டெடுக்கவும், நீட்டிக்கப்பட்ட ராணுவ பயிற்சி அளிக்கவும் வாஜ்பாய் மிகவும் உதவிகரமாக இருந்தார். விடுதலை புலிகளின் கடற்பிரிவான கடற்புலிகளை இலங்கை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடிந்தற்கு வாஜ்பாய் செய்த உதவிகள் தான் முக்கிய காரணம்.
கடந்த 1977-ம் ஆண்டில் வாஜ்பாய் இந்திய வெளியுறவுத் துறை மந்திரியாக இருந்த நேரம் நானும் இலங்கை வெளியுறவுத் துறை மந்திரியாக பதவி வகித்தேன்.
அப்போது அவருடன் எனக்கு நல்ல நட்பு ஏற்பட்டது, பிறகு வாஜ்பாய் பிரதமர் ஆனதும் அவரது தனிப்பட்ட செல்போன் நம்பரை எனக்கு அளித்தால் எங்கள் நட்பு தொடர்ந்து நீடித்தது.
இவ்வாறு அவர் மறைந்த வாஜ்பாய் குறித்த நினைவலைகளை பகிர்ந்துகொண்டார்.