வடக்கு கிழக்கில் முகாம்களை மூடமாட்டோம் - இலங்கைஇராணுவ தளபதி மீண்டும் திட்டவட்டம்
15 Aug,2018
இலங்கை இராணுவம் வடகிழக்கில் உள்ள தனது முகாம்களை மூடாது என தெரிவித்துள்ள இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க எனினும் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இராணுவம் நிலை கொண்டுள்ள இடங்களின் எண்ணிக்கையை குறைப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்குகிழக்கில் நாங்கள் 522 ஏக்கர் நிலங்களை விடுவிக்க தயாராகவுள்ளோம்,எனினும் இந்த நிலங்களை உரிமையாளர்களிடம் வழங்குவதற்கு முதல் நாங்கள் எங்களை உரிய விதத்தில் தயார்படுத்தவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எங்களிற்கு உட்கட்டுமான தேவைகள் உள்ளன இதன் காரணமாக நாங்கள் வேறு இடத்திற்கு செல்வது என்றால் படையினர் தற்காலிகமாக தங்கியிருப்பதற்கான இடங்களை நாங்கள் அமைக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக நான் அரசாங்கத்திடமிருந்து நிதியை கோரியுள்ளேன் எங்களிற்கு 800 மில்லியன் தேவைப்படுகின்றது இதில் 100 மில்லியன் ஏற்கெனவே கிடைத்துள்ளது எனவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
எனினும் நாங்கள் கோரியுள்ள முழுமையான நிதியை அரசாங்கம் இன்று தந்தால் கூட படையினரை வேறு இடத்தில் தங்கவைப்பதற்கான கட்டிடங்களை அமைப்பதற்கு எனக்கு ஐந்து மாதங்கள் பிடிக்கும் எனவும் இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆறு மாதத்திற்குள் நாங்கள் கோரிய நிதி எங்களிற்கு கிடைத்ததால் எங்கள் படையினர் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதை நான் உறுதிசெய்வேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யூலை மாத இறுதிவரை இலங்கை இராணுவம் வடக்கு கிழக்கில் 65,000 ஏக்கர் நிலங்களை விடுவித்துள்ளது, தற்போது படையினர் சுமார் 19,000 ஏக்கர் நிலங்களில் நிலை கொண்டுள்ளனர்,வடபகுதியில் 16,000 ஏக்கர் நிலத்தில் படையினர் நிலை கொண்டுள்ளனர். கிழக்கில் 3000 ஏக்கர் நிலத்தில் படையினர் நிலை கொண்டுள்ளனர் எனவும் இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களில் 2621 ஏக்கர் நிலம் மாத்திரமே தனியாரிற்கு சொந்தமானது ஏனைய நிலங்கள் அரசாங்கத்திற்கு சொந்தமானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது மக்களிற்கு சொந்தமான தனியார் நிலங்களை வழங்குவதற்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றின் காரணமாக தேசிய பாதுகாப்பு எந்த வகையிலும் பாதிக்கப்படாது,எங்கள் பிரசன்னம் தொடரும் ஆனால் நாங்கள் நிலைகொண்டுள்ள படையினரின் பிரசன்னத்தை குறைத்துகொண்டு நிலங்களை விடுவிக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் நாங்கள் நிலை கொண்டுள்ளமைக்கு அங்கு பிரச்சினைகள் காணப்பட்டதே காரணம்,யுத்தம் முடிவடைந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் காவல்துறையினர் அந்த பகுதிகளை பொறுப்பேற்பார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.