சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 21 பேர் கைது
06 Aug,2018
சட்டவிரோதமாக பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல முற்பட்ட இலங்கையைச் சேர்ந்த 21 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவினர், மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதாக காண்பிக்கும் வகையில் ட்ரோலர் படகொன்றில் பயணித்த இவர்கள், நேற்று (05) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக, கடற்படை பேச்சாளர் கொமாண்டர் தினேஷ் பண்டார தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து 117 கடல் மைல் தொலைவில் வைத்து, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் 19 ஆண்கள் உள்ளிட்ட 21 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு முதலுதவி மற்றும் வைத்திய வசதிகளும் வழங்கப்பட்டதாக, அவர் தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் மற்றும் ட்ரோலர் படகு என்பன, கொழும்பு துறைமுக பொலிசாரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.