சுருக்குவலையை தற்காலிகமாக தடைசெய்யுமாறு உத்தரவு!
02 Aug,2018
முல்லைத்தீவு மீனவர்களிடையே காணப்படும் சுருக்குவலை மீன்பிடி முறையினை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தகுந்த நடவடிக்கையினை உடனடியாக எடுக்குமாறு கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பில் குறிப்பாக சுருக்குவலை மீன்பிடியில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் ஏனைய கடற்தொழிலாளர்களுக்கிடையில் காணப்படும் பிரச்சனைகள் குறித்து எதிர்வரும் 08.08.18 அன்று முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அலுவலக மண்டத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்கூட்டத்திற்கு கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சா மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் இதில் மீனவ அமைப்புக்களை சார்ந்த 10 பிரதிநிதிகளை கலந்துகொள்ள ஏற்பாடு செய்யுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த கலந்துரையாடல் நடைபெற்று உரிய தீர்மானம் எடுக்கும் வரை மீனவர்களிடையே காணப்படும் சுருக்குவலை மீன்பிடி முறையினை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தகுந்த நடவடிக்கையினை உடனடியாக எடுக்குமாறும் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.