அம்பாந்தோட்டை- சூரியவெவவில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்ச துடுப்பாட்ட மைதானத்தை, இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து தனியார் அரசபங்குடைமையாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட சூரியவெவ துடுப்பாட்ட மைதானம் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளது,
இந்த நிலையிலேயே தற்போது இதனை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய, கதிர்காமம், வெள்ளவாய, அம்பாந்தோட்டை பகுதிகளில் விடுதிகளும் அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவுக்கே கொடுங்கள் ; பிரதமரிடம் கூட்டமைப்பு கோரிக்கை
வடக்கு வீட்டுத்திட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இந்திய அரசுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி இந்திய வீடமைப்பு திட்டத்தையே முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வடக்கில் சீனா முன்னெடுக்கவுள்ள வீடமைப்புத் திட்டத்தை அதே பெறுமதியில் இந்தியா முன்னெடுப்பதாக இந்திய அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு வாக்குறுதி கொடுத்துள்ளதாகவும் எனவே அதனை தாம் பிரதமருக்கு அறிவித்துள்ளதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் 25 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தவும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டத்தை அமைப்பதில் இந்திய – -சீன விவகாரம் தொடர்பில் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டிருந்தது.
அதற்கமைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்தித்து இந்த விடயங்கள் குறித்து ஆராய்வதாக ஜனாதிபதி- பிரதமர் இருவரும் கூறியிருந்த நிலையில் நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இதன்போதே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் கூறுகையில்,
வடக்கின் மீள் குடியேற்றத்துக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற போதிலும் மீள்குடியேற்றத்துக்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றாக்குறையாக உள்ளன. மக்களுக்கான காணிகளை கொடுத்து குடியேறக்கூடிய போதிலும் அங்கு சுமார் 1600 குடும்பங்கள் குடியமர்த்தப்படும் நிலையில் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள முடியாத நிலைமை உள்ளது. அம்மக்கள் எம்மிடம் இந்த விடயங்கள் குறித்து தமது கஷ்டங்களை வெளிப்படுத்திய நிலையில் பிரதமர் யாழ். விஜயத்தை மேற்கொண்டபோது இந்த நிலைமைகளை நாம் எடுத்துக் கூறினோம். கொழும்பில் மீண்டும் சந்தித்து உரிய அதிகாரிகளையும் அழைத்து இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என பிரதமர் கூறினார். அதற்கமைய இன்று (நேற்று) பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கக்கோரி எமது தரப்பு கருத்துக்களை முன்வைத்தோம். இதற்கான நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுப்பதாக பிரதமர் கூறியுள்ளார். அதேபோல் உரிய அதிகாரிகளிடமும் இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தவும் பணித்துள்ளார்.
வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவுக்கா அல்லது இந்தியாவுக்கா என்ற சர்ச்சைகள் எழுந்துள்ளன. வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டத்தை முன்னெடுப்பதாக ஆரம்பத்தில் இந்தியா கூறியுள்ள நிலையில் தற்போது சீனா புதிய வீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பது குறித்து அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ள நிலையிலேயே இப்போது குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் வடக்கில் 40 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை அமைத்துக்கொடுப்பதற்கு இந்தியா ஆரம்பத்தில் முன்வைத்த கடன் திட்டங்களை விடவும் குறைந்த அல்லது மாற்று திட்டம் ஒன்றினை சீனா முன்வைத்துள்ளது. எனினும் நாம் இந்திய தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் சீனாவின் அதே திட்டத்தை அதே தொகையில் தாம் செய்து தருவதாக இந்தியா எமக்கு வாக்குறுதி கொடுத்துள்ளது.
ஆகவே இந்தியா எமக்கு உறுதியளித்துள்ளதற்கு அமைய இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி இந்திய வீடமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 40 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை உடனடியாக இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் இணைந்து செய்துகொடுக்க வேண்டும். எமது மக்களுக்கான வீட்டுத்திட்டம் அவசியம். அதனை உரிய நேரத்தில் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை நாம் பிரதமரிடம் கேட்டுக்கொண்டோம். அதேபோல் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையில் 25 ஆயிரம் வீடுகளை கொண்ட ஒரு தொகுதியை அமைக்கும் நடவடிக்கைகளை ஆராயப்பட்ட நிலையில் அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தாம் பிரதமரிடம் கேட்டுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.