இஸ்லாமுக்கு மதம் மாறிய மகனை கத்தியால் வெட்டியால் தந்தை:!
26 Jul,2018
இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறிய மகன் மீது கத்தியால் வெட்டி காயப்படுத்தி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் தந்தை. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் நேற்றிரவு (25) இடம்பெற்றது
சம்பவத்தில் முதுகு மற்றும் கைகளில் படுகாயமடைந்த மகன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
யாழ்ப்பாணம் பிறவுண் வீதி கலட்டிச் சந்தியைச் சேர்ந்த பிரபாகரன் பிரதீபன் (தற்போதைய பெயர் அப்துல்லா) வயது 28 என்ற இளைஞனே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பில் அப்துல்லா என்ற பிரதீபன் தெரிவித்ததாவது: “யாழ்ப்பாணம் நகரில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றேன்.
குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி நான்கு வருடங்களுக்கு முன் இஸ்லாம் மதத்துக்கு மாறினேன். அத்துடன் எனது பெயரையும் அப்துல்லா என மாற்றினேன்.
இஸ்லாமியர்களின் குரான் நூலை படித்தேன். அதில் கூறப்பட்டுள்ள போதனைகள் என்னை மிகவும் கவர்ந்தன. அவை மீது நம்பிக்கை கொண்டேன்.
அதனால் இஸ்லாம் மதத்துக்கு மாறினேன். இஸ்லாம் மீது மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளேன். அதனால் எனது தந்தை என் மீது கடும் கோபம் கொண்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை இரவு 7 மணியளவில் வீட்டுக்குச் சென்றேன். என்னைக் கண்டதும் தந்தை ஆத்திரமடைந்து என்னை கத்தியால் கடுமையாகத் தாக்கினார்
நான் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்று பின்னிரவு வந்தேன். எனினும் காவல் கடமையில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை.
‘இரவில் அனுமதிக்கப்பட்டால் விடுதியில் தங்கியிருந்து மட்டுமே சிகிச்சை பெற முடியும். மருந்து கட்டவேண்டுமாயின் நாளை (இன்று) காலை வரவேண்டும்’ என்று கூறி பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என்னைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள்
நான் மீண்டும் இன்று காலை வைத்தியசாலைக்கு வந்த போது 24ஆம் விடுதியில் அனுமதித்துவிட்டார்கள்” என்றார்.
பிரதீபனுக்கு மூன்று சகோகதரிகள் உள்ளனர்.
அவர்களில் மூத்த சகோதரிகள் இருவர் திருமணமாகிவிட்டனர். இளைய சகோதரிக்கு திருமணமாகவில்லை. மதம் மாறிய சகோதரனின் நடவடிக்கைகளாலேயே அவரது திருமணம் தள்ளிப்போவதாக பெற்றோர் கவலை தெரிவித்தனர்.
இதே வேளை, இன்று காலை தனது மகனை யாழ் போதனா வைத்திய சாலைக்கு அனுமதித்த தாய் மகன் பிறந்தபோது சூட்டிய பிரதீபன் எனும் பெயரையே அனுமதி புத்தகத்தில் பதிய வழங்கியுள்ளார்.
‘எனது பிள்ளை இவ்வாறு நடந்துகொள்வது எமக்கு கஷ்டமாக உள்ளது’ என்று தாயார் கண் கலங்கினார்.