யாழில் இலவச அம்பியூலன்ஸ் சேவை ஆரம்ப நிகழ்வு பிரதமர் தலைமையில்
19 Jul,2018
வடக்கில் இலவச அம்பியூலன்ஸ் சேவையினை ஆரம்பிக்கும் நிகழ்வு நாளை மறுதினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.
யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றவுள்ளார். இணையவழிமூலமாக அவரது உரை நேரடியாக இடம்பெறவுள்ளது.
இந்தியாவின் உதவியுடன் 1990 சுவசிறிய எனும் திட்டத்தின் கீழ் இந்த இலவச அம்புலன்ஸ் சேவை கொழும்பு உட்பட தென்பகுதியில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த சேவையினை வடக்கில் ஆரம்பிக்கும் நிகழ்வே நாளை மறுதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது. பிற்பகல் 3.30மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வில் தேசிய திட்டமிடல் பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஹர்ச டி சில்வா, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் உட்பட வடமாகாணத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதேவேளை கம் பெரலிய வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டமும் வடபகுதியில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்விலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்வார்.
நாளை மறுதினம் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் கிளிநொச்சி, முல்லை தீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் கம்பெரலிய நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவும் பங்கேற்கவுள்ளார்.
கம்பெரலிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு குருநாகல் நிகவரட்டிய பகுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. இதன்படி இரண்டாம் கட்டம் வடக்கில் ஆரம்பிக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்த திட்டத்தின் கீழ் கிராமத்தின் வீதி கட்டமைப்பு, பாடசாலைகள், விளையாட்டு மைதானங்கள் புனரமைப்பு செய்யப்படுவதுடன் கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் உதவிகளும் வழங்கப்படவுள்ளது. கிராமத்தை கட்டியெழுப்பும் பிரதான நிகழ்ச்சி திட்டமாக கம்பெரலிய கருதப்படுகின்றமை குறிப்பிடதக்கது.
கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகப்பிரிவில் நிதி மற்று் ஊடக அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட விவசாயிகளின் தானியங்கள் பாதுகாப்பு மையம் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பொதுமக்களின் பாவனைக்காக ஒப்படைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்விலும் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.
இதனைவிட மீள்குடியேற்ற அமைச்சினால் அன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் பொதுச்சந்தைக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி பொதுச்சந்தையானது தீ விபத்தை அடுத்து சேதமடைந்திருந்தது. இதனையடுத்தே புதிய சந்தைக்கான கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது. இந்த நிகழ்விலும் பிரதமர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.