காடுகள் வழியாக கதிர்காமத்துக்கு கால்நடையாகப் படையெடுக்கும் 20 ஆயிரம் பேர்!
16 Jul,2018
வரலாற்றுப் பிரசித்திபெற்ற கதிர்காம கந்தனின் கொடியேற்றம் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. இந்நிலையில் உகந்தை மலை முருகன் ஆலயத்திலிருந்து காட்டுப்பாதை 4 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது இப்பாதை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை திறந்திருக்கும்.
இந்த காட்டுப் பாதை வழியாக முதல் நாள் 1780 பேர் பயணம் செய்தனர். கடந்த 04 ஆம் திகதியிலிருந்து நேற்று முன்தினம் பிற்பகல் 3.00 மணி வரை 19 ஆயிரத்து 645 பேர் காட்டுப்பாதை ஊடாக கதிர்காமம் நோக்கிச் சென்றுள்ளனர்.
உகந்தை மலை ஆலய கொடியேற்றம் 13 ஆம் திகதி நடைபெற்றது. இக் கொடியேற்றத்தை பார்த்துவிட்டு அன்று காட்டுப்பாதையில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கதிர்காமம் நோக்கி பயணித்ததாக உகந்தமலை ஆலய வண்ணக்கர் திசநாயக்க சுதுநிலமே தெரிவித்தார்.
கடந்த வருடம் 25 ஆயிரம் பக்தர்கள் சென்றுள்ளனர். இவ்வருடம் அதிகமான பக்தர்கள் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை இன்னும் ஒன்பது தினங்கள் திறந்திருக்கும். 24 ஆம் திகதி மாலை காட்டுப்பாதை மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காட்டுப்பாதை ஊடாகச்செல்பவர்களுக்கு இராணுவம், வனஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் பாதுகப்பு வழங்குவதோடு குடிநீர் உட்பட சகல வசதிகளும் மேற்கொண்டுள்ளனர். கதிர்காம பாதயாத்திரை செல்வோர் வெற்றுப் பொலித்தீன் பைகள் பிளாஸ்டிக் போத்தல்கள் போன்றவற்றைக் காடுகளில் வீசுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
மதுபானத்தைக் கொண்டு செல்லுதல் காடுகளுக்குத் தீ வைத்தல் மரங்களை வெட்டுதல் மிருகங்கள் மற்றும் பறவைகளை வேட்டையாடுதல் புதைபொருள் தோண்டுதல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட முடியாது என உகந்தை முருகன் ஆலயத்தின் பிரதம வண்ணக்கர் திஸாநாயக்க சுது நிலமே தெரிவித்தார்.
இவ்வாறான காரியங்களில் எவராவது ஈடுபட்டால் வனபரிபாலனத் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து சம்பந்தப்பட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறியத்தந்துள்ளனர்