40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்ற இலங்கை அரசு முடிவு
11 Jul,2018
இலங்கையில், கடந்த 1976 ஆம் ஆண்டுக்கு பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை. மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், ஆயுட்காலம் முழுவதும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில், 40 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் கொடூர குற்றங்கள் புரிந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
போதைப்பொருள் தொடர்பான கொடூர குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 19 பேரிற்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தொடர்ச்சியாக போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 19 பேருக்கு மரணதண்டணையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட வேண்டிய 19 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும், அமைச்சரவை ஒருமனதாக ஒப்புதல் வழங்கியுள்ளதால், விரைவில் ஜனாதிபதி கையெழுத்திட்ட பின்னர் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அந்நாட்டு அமைச்சரவை செய்தி தொடர்பாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.