கல்முனை மாநகர சபை ஆணையாளராக முஸ்லிம் உயரதிகாரி நியமனம் பெறாமல் ஹக்கீம் காங்கிரஸ் தடுத்து நிறுத்தியது ஏன்?
10 Jul,2018
= ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் ஹசன் அலி ஆவேசம்
கல்முனை மாநகர சபை ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தரத்தை சேர்ந்த முஸ்லிம் பெண் உயரதிகாரி ஆர். யு. அப்துல் ஜலில் நியமனம் பெறுவதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தடுத்து நிறுத்தி உள்ளதாக ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான சுகாதார மற்றும் போசாக்கு துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி குற்றம் சாட்டி உள்ளார்.
நிந்தவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றிய ஆர். யு. அப்துல் ஜலிலை கல்முனை மாநகர சபை ஆணையாளராக நியமிக்க கிழக்கு மாகாண சபை நடவடிக்கை எடுத்து இருந்தது என்றும் இவரை அடிப்படைவாதி என்று குற்றம் சுமத்தி இந்நியமனத்தை முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகள் தடுத்து விட்டனர் என்றும் நேற்று செவ்வாய்க்கிழமை ஹசன் அலி வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இவ்வறிக்கை வருமாறு:-
இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தரத்தில் 11 உயர் பதவி நிலைகள் கிழக்கு மாகாண சபையில் உள்ளன. இவற்றில் 05 சிங்களவர்களும், 04 தமிழர்களும், 2 முஸ்லிம்களும் தற்போது பதவி வகிக்கின்றனர். இவர்களில் இரு சிங்களவர்கள் உரிய நிர்வாக சேவை தரத்தை உடையவர்கள் அல்லர்.
அதே போல கிழக்கு மாகாணத்தின் இன பரம்பலுக்கு புறம்பான விதத்திலேயே இந்நியமனங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இம்மாகாணத்தின் இன பரம்பலின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு 05 தமிழர்களும், 04 முஸ்லிம்களும், 02 சிங்களவர்களுமே நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்நியமனங்களை பெறுவதற்கான சகல தகுதிகளையும் கொண்டவர்கள் தமிழ், முஸ்லிம் சமூகங்களில் உண்மையிலேயே இருக்க தக்கதாகவே இந்த அநியாயம் நடந்தேறி உள்ளது. இது ஒன்றும் புதிதான விடயம் அல்ல என்பதுடன் இது கிழக்கில் தொடர்ந்தேச்சையாக நடத்தப்பட்டு வருகின்ற சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்பின் இன்னொரு வடிவமும் ஆகும். இதில் மிக அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கின்ற தரப்பினராக முஸ்லிம்களே உள்ளபோதிலும் முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்று சொல்லி கொள்வோர் இவற்றை கண்டும் காணாதவர்களாக நடந்து கொள்வதை இவ்வநியாயத்துக்கு துணை போகின்ற விடயமாகவே நிச்சயம் பார்க்க வேண்டி உள்ளது.
இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தரத்தை சேர்ந்த முஸ்லிம் பெண் உயரதிகாரியாக ஆர். யு. அப்துல் ஜலில் உள்ளார். இவர் நிந்தவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவர். இவருடைய சிறப்பு தரத்துக்கு உரித்தான உயர் பதவியை வழங்க கிழக்கு மாகாண சபை முன்வந்து இருந்தது. இதற்காக இவர் கிழக்கு மாகாண தலைமையத்துக்கு மாற்றப்பட்டார். இவரை கல்முனை மாநகர சபை ஆணையாளராக நியமிக்க கிழக்கு மாகாண ஆளுனர் இதய சுத்தியுடன் நடவடிக்கை எடுத்தார். ஆனால் தென்கிழக்கின் தலைநகரமான கல்முனைக்கு இவர் நியமனம் பெறுவதை முஸ்லிம் அல்லாதவர்கள் ஒரு வேளை எதிர்க்க கூடும் என்று நாம் நினைத்து இருக்க துரதிஷ்டவசமாக ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகளே இவருக்கான நியமனத்தை தடுத்து நிறுத்தி உள்ளனர். அடிப்படைவாதி என்று இவருக்கு முத்திரை குத்தி அவர்கள் நினைத்ததை சாதித்து விட்டனர். ஆயினும் இது குறித்து அவர்கள் நிச்சயம் வெட்கப்பட வேண்டும். அத்துடன் அவர்களின் உண்மையான முகத்தை எமது மக்கள் மீண்டும் அடையாளம் காண்பதற்கும் இதன் மூலம் முடிந்து உள்ளது.
முஸ்லிம் தேசியம் வெட்கப்பட வேண்டிய விடயமாகவும் இது உள்ளது. அரச நிர்வாக சேவைகளில் அவர்களுடைய சமூகத்தை சேர்ந்தவர்களை ஊக்குவிக்க வேண்டியவர்களின் கீழ்த்தரமான செய்கையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இவர்களா முஸ்லிம் தேசியத்துக்கான அதிகார அலகை பெற்று தர போகின்றனர்? என்று வினவுகின்றோம். இவர்களா அம்பாறை மாவட்டத்துக்கு ஒரு முஸ்லிம் அரசாங்க அதிபரை பெற்று தர போகின்றனர்? நமது சமுதாயத்தை விற்று பிழைக்க இவர்களை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.