கிருஷ்ணா கொலைக்கு போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்பு! - பொலிஸ் சந்தேகம்
10 Jul,2018
கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான கிருஷ்ண பிள்ளை கிருபானந்தனின் கொலை, போதைப்பொருள் வியாபரத்துடன் தொடர்புடையதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பில் 24 மணிநேரத்துக்குள் இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் புறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டியார்தெருவில் பழக்கடையொன்றுக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினரான 40 வயதுடைய கிருஷ்ணா என்பவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த கிருஷ்ணா மீது கஞ்சா போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் இரண்டு வழக்குகள் காணப்படுகின்றன. இதில் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்ட இவர் தற்போது பிணையிலிருந்த நேரத்திலேயே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார். இவரது மரணமானது போதைப்பொருள் வியாபாரத்தை மையப்படுத்தியே மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுகின்றது.
எனினும் மேல்மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரின் வழிக்காட்டலின் கீழ் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாராலும், புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழான குழுவொன்றும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்