சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் இலங்கை 108 ஆவது இடத்திலும், இந்தியா 73-வது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை, இந்தியர்கள் உள்பட சர்வதேச நாடுகளை சேர்ந்தவர்கள் தங்களின் கரறுப்பு பணத்தை சுவிட்சர்லாந்து வங்கிகளில் பதுக்குகிறார்கள். இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கறுப்பு பண பதுக்கலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது.
எனினும் அதனை மீறியும் கடந்த ஆண்டு, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பண பதுக்கல் 50 சதவீதம் உயர்ந்து அண்மையில் வெளியானது. இதன் மூலம் சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கியவர்களின் பட்டியலில் இந்தியா 73-வது இடத்தில் உள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கி வெளியிட்டுள்ள வருடாந்திர ஆய்வறிக்கையின் மூலம் இது தெரியவந்துள்ளது.
இந்த பட்டியலில் இங்கிலாந்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து அமெரிக்கா 2-வது இடத்தில் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக மேற்கு இந்திய தீவு, பிரான்ஸ், ஹாங்காங், பஹாமாஸ், ஜெர்மனி, குருன்செவ், லக்சம்பர்க், கேமன் தீவுகள் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன.
பிரிக்ஸ் நாடுகளை பொறுத்தவரை, சீனா 20-வது இடத்திலும், ரஷ்யா 23-வது இடத்திலும், பிரேசில் 61-வது இடத்திலும், தென் ஆப்ரிக்கா 67-வது இடத்திலும் உள்ளன. அண்டை நாடான பாகிஸ்தான் இந்தியாவுக்கு ஒரு படி முன்னேறி 72-வது இடத்தில் இருக்கிறது.
இதேபோன்று சிங்கப்பூர், ஐக்கிய அரசு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, பனாமா, ஜப்பான், அவுலஸ்ரேலியா, நெதர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம், சைப்ரஸ், இஸ்ரேல், மெக்சிகோ, பெர்முடா, துருக்கி, குவைத்து மார்ஷல் தீவுகள், கனடா, தாய்லாந்து, தென் கொரியா, மலேசியா, பெலிஜ், இந்தோனேஷியா, செசல்ஸ், ஜிப்ரால்டர், சமவோ, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், கஜகஸ்தான் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் இந்தியாவுக்கு முன்னதாக உள்ளன.
இந்தியாவுக்கு கீழ் மொரிஷியஸ் 77-வது இடத்திலும், வங்கதேசம் 95, இலங்கை 108, நேபாளம் 112, வத்திக்கான் சிற்றி 122, ஈராக் 132, ஆப்கன் 155, புர்கினா பாசோ 162 , பூட்டான் 203, வட கொரியா 205 ) ஆகிய நாடுகள் உள்ளன. கடைசி இடத்தில் பலாவ் 214 உள்ளது.
1996-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த பட்டியலில் இந்தியா முதல் 50 நாடுகளுக்குள் இருந்து வந்தது.
அதன் பின்னர் 2008-ம் ஆண்டு 55-வது இடத்துக்கு இறங்கியது. 2009 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் 59-வது இடத்தில் இருந்து வந்த இந்தியா 2011-ம் ஆண்டு மீண்டும் 55-வது இடத்துக்கு சென்றது.
அதன் பின் இந்த பட்டியலில் ஏற்ற இறங்கங்களை சந்தித்து வந்த இந்தியா கடந்த 2016-ம் ஆண்டு 88-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது