இலங்கை பாராளுமன்ற தேர்தலில் சீனாவிடம் நன்கொடை - ராஜபக்சே பதில்
01 Jul,2018
இலங்கை பாராளுமன்றத்துக்கு 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது சீனாவில் உள்ள பிரபல நிறுவனத்திடம் இருந்து முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே 76 லட்சம் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக பெற்றதாக அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் சமீபத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டது.
இதுதொடர்பாக, பதில் அளிக்காமல் மவுனம் காத்துவந்த ராஜபக்சே, தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
அந்த கட்டுரையில் காணப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவிடம் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே காட்டிவந்த நெருக்கம் தொடர்பாக இந்தியா முன்னர் கவலை கொண்டிருந்ததாகவும், இலங்கையின் ஹம்பன்டோட்டா துறைமுகத்தை சீனா ராணுவ தேவைகளுக்காக பயன்படுத்தி கொள்ளக்கூடும் என அச்சம் தெரிவித்திருந்ததாகவும் அந்த கட்டுரையாளர் சுட்டிக்காட்டியுள்ளதையும் ராஜபக்சே மறுத்துள்ளார்.
சீனாவுடனான இலங்கையின் நெருக்கம் தொடர்பாக இந்தியாவை ஆட்சி செய்த முன்னாள் காங்கிரஸ் அரசுக்கு அளித்திருந்த வாக்குறுதிகளை நான் எப்போதுமே மீறியதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்க நாளிதழ் வெளியிட்டுள்ள இந்த பரபரப்பு குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விரைவில் விசாரணைக்கு தயாராகி வருவதாக தெரிகிறது