மகிந்த கைது செய்யப்பட வேண்டும் : ராஜிக கொடித்துவக்கு
30 Jun,2018
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கைது செய்ய வேண்டும் என இலங்கை இளம் தொழில் முனைவோர் அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சட்டத்தரணி ராஜிக கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். சர்வதேச பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ள குற்றவாளி மறைந்திருக்கும் இடத்தை அறிந்தும் அதனை பாதுகாப்பு தரப்பினருக்கு கூறாமல் மறைத்த குற்றத்திற்காக முதலில் கைது செய்ய வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்து வரும் பொறுப்பை தாம் ஏற்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெளிவாக கூறியுள்ளார். உதயங்க வீரதுங்கவை நாங்கள் கொண்டு வருகின்றோம். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரை முடிந்தால் நீங்கள் கொண்டு வாருங்கள் என்றும் கூறியுள்ளது. இது திருடனை பார்த்து திருடன் சவால் விடுவதாகும். எமது திருடனை நாங்கள் அழைத்து வருகிறோம். உனது திருடனை அழைத்து வா என்பது போன்ற கதை. இதுதான் திருடன் வீரனாக மாறிய கதை.
எனினும் மகிந்த ராஜபக்சவும் ஒரு சட்டத்தரணி. குற்றவியல் சட்டத்தின் 20 ஆம் பந்தியில் இருந்து 25 வது பந்தி வரையில், குற்றவாளி ஒருவர் அல்லது பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ள ஒருவர், சட்டத்திற்குள் சிக்காமல் இருந்தால், அவரை எப்படி சிக்க வைப்பது என்பது விபரிக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச, சர்வதேச பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட நபரான உதயங்க வீரதுங்க இருக்கும் இடம் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி அறிந்துள்ளார். இதனடிப்படையில், சட்டப்படி கைதுசெய்யப்பட வேண்டிய முதல் நபர் மகிந்த ராஜபக்ச. திருடனை மறைத்து வைத்தமை மற்றும் திருடன் இருக்கும் இடத்தை அறிந்தும் அதனை சட்டத்தை அமுல்படுத்துவோருக்கு தெரியப்படுதாத குற்றச்சாட்டில் மகிந்த ராஜபக்சவை கைதுசெய்ய முடியும்.
உதயங்க வீரதுங்க மட்டுமல்ல, பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய இருக்கும் இடமும் மகிந்த ராஜபக்சவுக்கு தெரிந்திருக்கும்.
முன்னாள் ஜனாதிபதி சட்டரீதியான சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டிய நபரை, சட்டத்திற்கு முன் நிறுத்தாமல் தவிர்த்து வருகிறார். கொலை குற்றம், பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்தமை மற்றும் மிக் விமான கொடுக்கல் வாங்கலில் நடந்த பாரிய ஊழலில் நேரடியான தொடர்புள்ள உதயங்க வீரதுங்க பற்றிய தகவல்கள் மகிந்த ராஜபக்சவிடம் இருக்கும். குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் மகிந்த ராஜபக்சவின் வீட்டுக்கு சென்று தேடுதல் நடத்தி இந்த தகவல்களை கைப்பற்ற முடியும். சட்டத்தின் படி குற்றச்சாட்டை எதிர்நோக்கும் நிலையில் தப்பிச் சென்ற நபரை பாதுகாக்கும் நபர் என்ற வகையில் மகிந்த ராஜபக்சவை கைதுசெய்ய வேண்டும் என ராஜித கொடித்துவக்கு குறிப்பிட்டுள்ளார்.