இலங்கை: போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் சட்டவிரோத குழுவை சேர்ந்தவர் பலி
30 Jun,2018
இலங்கையின் தென் மாகாணத்தின் மாத்தறை கம்புறுபிட்டிய பகுதியில் விசேட அதிரடி படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சட்டவிரோத குழுவை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கி பிரயோகம் நேற்றிரவு 8.00 மணி அளவில் நடத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
கம்புறுபிட்டிய பகுதியில் சட்டவிரோத குழு நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு ஏற்ப விசேட அதிரடி படையினர் சாலையில் தடைகளை ஏற்படுத்தி சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
அப்போது விசேட அதிரடி படையினரின் கட்டளையை மீறி முச்சக்கரவண்டியொன்று பயணித்ததாகவும், அந்த முச்சக்கரவண்டியை விசேட அதிரடி படையினர் பின்தொடர்ந்துள்ளதாக போலீசார் குறிப்பிடுகின்றனர். குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்த சிலர் விசேட அதிரடி படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
இலங்கை: கொள்ளையரை சுட்டுக்கொன்ற போலீஸ்
இதன்போது விசேட அதிரடிபடையினரால் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதுடன் ஏனைய இருவர் பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
காயமடைந்த நபரை விசேட அதிரடிபடையினர் கம்புறுபிட்டிய ஆந்தபான வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.
மாத்தறை கம்புறுபிட்டிய வில்பிட்ட வனப் பகுதியில் தற்போது பாரிய சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
போலீசார் மற்றும் விசேட அதிரடிபடையினர் இணைந்து இந்த சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மாத்தறை கம்புறுபிட்டிய பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தின் பின்னர் சில சந்தேக நபர்கள் வில்பிட்ட வனப் பகுதிக்குள் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறு தப்பிச் சென்ற சந்தேகநபர்களை கைது செய்யும் நோக்குடனேயே இந்த சுற்றி வளைப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலீசார் குறிப்பிடுகின்றனர்.
பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்ட பகுதியிலிருந்து ரி-56 ரக துப்பாக்கியொன்று விசேட அதிரடிபடையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடி படையினருடன் இணைந்து போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது