முல்லைத்தீவில் பாலியல் இச்சைகளை தூண்டும் மருந்து வகைகள் விநியோகம்!
29 Jun,2018
முல்லைத்தீவு மாவட்ட மருந்தகங்கள் ஊடாக பாலியல் இச்சைகளை தூண்டும் மருந்து வகைகள் தென்னிலங்கைக்கு விநியோகிக்கப்பட்டுவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஞ.குணசீலன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக தனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அதன் அடிப்படையிலே முல்லைத்தீவில் நான்கு மருந்தகங்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனையினரால் நான்கு மருந்தகங்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, இதனையடுத்து இந்த மருந்த உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஒன்றிணைந்து கடந்தவாரம் மாவட்ட செயலகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டார்கள்.
இதனையடுத்து முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்திலே சர்ச்சைக்குரிய இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டபோது வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகளை திசைதிருப்பு நோக்கிலே மாவட்டத்தில் உள்ள மருந்தகங்கள் மீது திடீர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதனை நிராகரித்த வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ. குணசீலன், தனக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலே தாம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
இதன்போது அமைச்சர் ரிஷாட் பதியூதினால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடம் கருத்துப்பெற்றப்பட்ட போது, குறித்த மருந்தக உரிமையாளர்களுக்கு 6 மாதகால அவகாசம் வழங்குமாறு கோரப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு வெளியிட்ட வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன், மக்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொள்ளாது மருந்தகத்தை நடத்துபவர்களின் உழைப்பை பற்றி மாத்திரமே கருத்தில் கொள்கின்றீர்களா என கருமையான தொணியில் வினவினார்.
இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் ரிஷாட் பதியூதின் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிவரை மருந்தக உரிமையாளர்களுக்கு அவகாசம் வழங்குவதாகவும், குறித்த மருந்தகங்கள் மீது செய்யப்பட்ட வழக்கை மீளப்பெறுமாறு கூறினார்.
இந்த கூட்டத்தின் இறுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், என்ன தீர்மானம் மேற்கொள்வேன் என உடனடியாக கூற முடியாது என தெரிவித்தார்.