பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி-பலாலி
28 Jun,2018
பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக, எதிர்வரும் ஜூலை 10ஆம் நாள், நேரில் வந்து ஆராய்வதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று நடந்த வடக்கு அபிவிருத்தி தொடர்பான சிறப்புக் கூட்டத்தில், பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்துவது, அதற்குத் தேவையான காணிகள் தவிர்ந்த, அதனை அண்டிய ஏனைய காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஆராயப்பட்டது.
இந்த விடயத்தில் விரைவாக முடிவெடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, எதிர்வரும் ஜூலை 10ஆம் நாள் தாம் யாழ்ப்பாணம் வரும் போது, இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங்கும், அங்கு வருவார் என்றும், இருவரும் இணைந்து. பலாலி விமான நிலையத்தை நேரில் பார்வையிட்டு, அதனை அபிவிருத்தி செய்வது குறித்த திட்டங்களை இறுதி செய்வதாகவும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
அத்துடன், பலாலி விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவைப்படும் காணிகள் தொடர்பாக, சிறிலங்கா விமானப்படை, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள், மற்றும் இந்திய நிபுணர்களின் அறிக்கையைப் பெற்று இறுதி முடிவை எடுப்பது என்றும் நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது