விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத்தேடி தீவிர வேட்டை!
24 Jun,2018
முல்லைத்தீவில் வெடிபொருட்களுடன் முன்னாள் போராளிகள் கைதுசெய்யப்பட்டதை அடுத்து கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுத கிடங்குகளைத் தேடும் பணிகள் இன்று அதிகாலை முதல் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக எமது பிராந்தியச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு பேராறு பகுதியில் முச்சக்கர வண்டியொன்றை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்திய போது கிளைமோர் உள்ளிட்ட வெடிபொருளுக்குரிய இலத்திரனில் உபகரணங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடி, மற்றும் சீருடை ஆகியன மீட்கப்பட்டிருந்தன.
இந்த சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டி சாரதி உட்பட இருவரை ஒட்டுசுட்டான் பொலிஸார் கைதுசெய்திருந்ததுடன், ஒருவர் தப்பிச் சென்றிருந்தார்.
இதனையடுத்து அரச புலனாய்வாளர்கள் மேற்கொண்ட தீவிர தேடுதல் மற்றும் விசாரணையை அடுத்து புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் வைத்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் தொடர்ச்சியாக மேற்கொண்ட தேடுதலை அடுத்து தப்பிச் சென்ற கிளிநொச்சி சாந்தபுரத்தை சேர்ந்த ஏகாம்பரம் என்பவரை மாங்குளம் பகுதியில் வைத்து பொலிஸார் நேற்றிரவு கைதுசெய்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேகநபரை கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதிக்கு அழைத்துச்சென்ற பொலிசார் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் அங்குள்ள பகுதிகளில் ஆயுதங்கள் இருக்கலாம் என தேடுதல் நடத்தி வருகின்றனர்.
இந்தப் பகுதிக்குள் இதுவரை எவரும் அனுமதிக்கப்படவில்லை என்பதுடன் ஆயுதங்களோ வெடிபொருட்களோ இதுவரை மீட்கப்படவில்லை எனவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கும் அரச புலனாய்வு பிரிவினருக்கும் இடையில் தொடர்புகள் உள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.