முல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்!
22 Jun,2018
முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் கொடி, சீருடைகள், வெடிபொருட்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பிச் சென்ற மற்றொருவரைத் தேடி பாரிய தேடுதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இராணுவம், பொலிஸ், விசேட அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுக்கும் தீவிர நடவடிக்கைகளால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதற்ற நிலை தோன்றியுள்ளது.
முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பேராறு பகுதியில் இன்று காலை வீதி பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் முச்சக்கர வண்டி ஒன்றை மறித்து சோதனையிட்டிருந்தனர். இதன்போது விடுதலைப் புலிகளின் கொடி, சீருடை மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து முச்சக்கர வண்டி சாரதி உட்பட இருவரை பொலிஸார் கைதுசெய்தனர். மேலும் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையம் அழைத்துவரப்பட்டு விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வரும் அதேவேளை இராணுவம் மற்றும் புலனாய்வாளர்கள் பலர் பொலிஸ் நிலையத்தில் குவிந்துள்ளனர்.
பொலிஸ் மற்றும் இராணுவம் இணைந்து தப்பியோடியவரை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகளை காட்டில் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தில் புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் மேலுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நபரும் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதனிடையே முல்லைத்தீவு மற்றும் நெடுங்கேணி பகுதிகளில் பல்வேறு இடங்களில் இராணுவம், பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து தேடுதல்களை மேற்கொண்டு வருவதாக அறியமுடிகிறது
இந்த சம்பவங்களால் பொதுமக்கள் மற்றும் முன்னாள் போராளிகள் அச்சமடைந்த நிலையில் உள்ளனர்.
இதற்கிடையே, “முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானின் இன்று அதிகாலை முச்சக்கர வண்டி ஒன்றிலிருந்து 20 கிலோ கிராம் எடையுடைய கிளைமோர் குண்டு, அதனை மறைந்திருந்து இயக்கும் ரிமோல்ட் உள்ளிட்ட கருவிகள், விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை மற்றும் புலிக் கொடி ஒன்று மீட்கப்பட்டன. முச்சக்கர வண்டி சாரதியும் மற்றொருவரும் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். ஓடிவருக்கே தகவல்கள் தெரியும் என சந்தேகநபர்கள் வாக்குமூலமளித்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள். தப்பி ஓடியவரும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டது. நெடுங்கேணிப் பகுதியிலிருந்து ஒட்டுசுட்டான் பகுதி வழியாக புதுக்குடியிருப்பு வீதியில் பயணித்த போதே முச்சக்கர வண்டி பொலிஸாரால் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. தமக்கு என்ன நோக்கம் எனத் தெரியாது அவர்கள் தெரிவித்துள்ளனர். தப்பிஓடியவருக்கு தான் கிளைமோர் உள்ளிட்டவை தொடர்பான தகவல் தெரியும் என அவர்கள் வாக்குமூலமளித்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.