கிளிநொச்சியில் 10 பேரை தாக்கி காயப்படுத்திய சிறுத்தை அடித்துக் கொலை!
21 Jun,2018
கிளிநொச்சி - அம்பாள்குளம் கிராமத்தில், வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் உட்பட பத்து பேரைத் தாக்கிக் காயப்படுத்திய சிறுத்தை பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டது.
அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயத்துக்குப் பின்புறமாகவுள்ள மக்கள் குடியிருப்புப் பகுதியில், இன்று காலை 7 மணியளவில், காணி ஒன்றுக்குள் புகுந்த சிறுத்தை , மாடு கட்டுவதற்குச் சென்ற ஒருவரையும் மற்றொருவரையும் தாக்கியது. இது தொடர்பில், கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிக்கு அறிக்கப்பட்டதை அடுத்து, வெறுங்கையுடன் வந்த அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்குமிடையே, கருத்து முரண்பாடு ஏற்பட்டது.
யாழ்ப்பாணத்தில் இருந்து வனஜீவராசிகள் திணைக்கள வைத்தியர் வருவாரென அறிவிக்கப்பட்டது. இதையடுத்து. பிற்பகல் 11 மணியளவில், வனஜீவராசிகள் திணைக்கள வைத்தியர்கள் உட்பட சில அதிகாரிகள் வந்தனர்.
அதற்கிடையில், குறித்த சிறுத்தை, அப்பகுதியைச் சேர்ந்தவர்களில் 8 பேரைத் தாக்கி காயப்படுத்தியிருந்தது. பின்னர், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரையும் சிறுத்தை தாக்கியது. இதையடுத்து, உரிய நேரத்துக்கு திணைக்கள அதிகாரிகள் வந்து நடவடிக்கை எடுக்கவில்லையென, அங்கிருந்த பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இதனால், அவ்விடத்திலிருந்த அதிகாரிகள், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.
பின்னர், பொதுமக்கள் அனைவரும், சிறுத்தை மறைந்திருந்த பற்றைக்குள், பொல்லுகளுடன் சென்று சுற்றிவளைத்து, சிறுத்தையைப் பொல்லால் தாக்கிக் கொன்றனர். சம்பவ இடத்தில், கிளிநொச்சி பொலிஸார் மற்றும் கிராம அலுவலர் உட்பட பலர் இருந்தனர். சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள், கிளிநொச்சி மாவட்ட வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.