அமெரிக்கா வெளியேறியதைக் கொண்டாடும் இலங்கை! -
20 Jun,2018
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து அமெரிக்கா வெளியேறியமையால் இலங்கை மீதான சர்வதேசத்தின் அழுத்தம் குறையும் என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எவ்வாறாயினும், மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து இலங்கை அரசாங்கம் ஒருபோதும் விலகப்போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
”ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளமை இலங்கைக்கு நன்மையை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறலாம். ஏனெனில், சர்வதேச மட்டத்திலிருந்து இலங்கைக்கு விடுக்கப்பட்ட பாரிய அழுத்தமொன்று குறைவடையும். இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு அமெரிக்கா முதலில் எதிர்ப்பினை வெளியிட்டது. எனினும், கடந்தகாலங்களில் இலங்கை ஐ.நா.வில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதையடுத்து, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்காவே கொண்டுவந்தது.
இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து அமெரிக்கா நேற்று வெளியேறியுள்ளது. அமெரிக்கா வெளியேறினாலும், நாம் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்கியோ விலகியோ செயற்படப்போவதில்லை என்பதையும் நாம் இவ்வேளையில் உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்