கதிர்காமம் விகாராதிபதியைக் கொல்ல 30 இலட்சம் ரூபா கொடுத்த முன்னாள்
17 Jun,2018
கதிர்காமம், கிரிவெஹெர விகாரையின் விகாராதிபதி வண. கொபவக்க தம்மிந்த தேரர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு 30 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவரெனக் கைது செய்யப்பட்டுள்ள மஹாசென் தேவாலயவின் முன்னாள் கப்புறாளை போரேகெதர அசேல லக்ஷ்மன் பண்டாரவினாலேயே, இத்தொகைப் பணம், ஒப்பந்தக்காரர்களிடம் வழங்கப்பட்டுள்ளதெனக் கண்டறியப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி ருவன் குணசேகர, இவர்களிடமிருந்து, இருவகைத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ள என்றார்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தகவல் வழங்கிய பேச்சாளர், மேற்படி துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 8 விசேட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, கதிர்காரம் மற்றும் தங்காலை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.