சர்ச்சைக்குரிய இலங்கை பௌத்த பிக்குவுக்கு சிறை தண்டனை
14 Jun,2018
இலங்கையின் பொதுபல சேனா என்ற அமைப்பின் பொதுச் செயலாளர், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, ஆறு மாத கால கடூழிய சிறைத் தண்டனை விதித்து ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று, வியாழக்கிழமை, தீர்ப்பளித்தது.
இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு தலா ஆறு மாதம் வீதம் ஒரே நேரத்தில், இந்தத் தண்டனையை கழிக்க வேண்டும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலியகொடவின் மனைவி சந்தியா எக்நெலியகொடவிற்கு அவதூறாக பேசி, அச்சுறுத்தல் விடுத்ததாக இந்த பௌத்த பிக்கு மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
2016ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி, ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் வைத்தே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தேரருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதவான், வழக்கின் தீர்ப்பை இன்று அறிவித்தார்.
இலங்கை: தேர்தலில் வாக்களிக்காத தேர்தல் ஆணையாளர்
"தமிழ் இன அழிப்பின் அடையாளமே யாழ் நூலக எரிப்பு"
குற்றவியல் சட்டம் 386 மற்றும் 486 என்ற பிரிவுகளின் கீழ் துன்புறுத்தியமை, அச்சுறுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு இந்தத் தண்டனையை விதிப்பதாக நீதவான் அறிவித்தார். ஒரு குற்றத்திற்கு ரூபாய் 1,500 வீதம் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு ரூபாய் 3,000 அபராதம் விதிக்கப்பட்டது.
சந்தியா எக்நெலியகொடவிற்கு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டார். இந்த நட்ட ஈட்டை வழங்காவிடின், அதனை அபராதமாக செலுத்த வேண்டும் என நீதவான் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இந்த அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 3 மாத கால சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதவான் குறிப்பிட்டார்.
நீதவான் தீர்ப்பை வாசித்த பின்னர், குற்றவாளிக்கூண்டில் நின்ற ஞானசார தேரர், தனது கருத்தைத் தெரிவிக்க சந்தர்ப்பமளிக்குமாறு கூறியதுடன் ''நீதித்துறை மட்டுமே இருக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கு வாய்ப்பளிக்க முடியாது எனக் கூறிய நீதவான், தேவையெனில், தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்யுமாறு கூறினார்.
இதன்பின்னர், ஞானசார தேரரை சிறைச்சாலை பேருந்தில் ஏற்ற அழைத்துவந்தபோது அங்கு பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட தேரர் பலர் கூடியிருந்ததுடன், அங்கு சற்று பதற்றமும் ஏற்பட்டது.
பொது பலசேனா என்ற அமைப்பும், அதன் பொதுச் செயலாளர் ஞானசார தேரரும் இலங்கையில் சர்ச்சைக்குரிய தரப்பாகவே கடந்த காலம் முதல் பார்க்கப்பட்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது