பதவி விலகுகிறார் மஸ்தான்! மஸ்தான் விவகாரம் தேவையற்ற மோதலை உருவாக்கும்!
13 Jun,2018
எதிர்ப்புகளுக்குப் பணிந்து பதவி விலகுகிறார் மஸ்தான்!
இந்து கலாசார பிரதியமைச்சர் பதவியிலிருந்து விலகி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக மீளவும் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக பிரதியமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார். இதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்து கலாசார அமைச்சை இந்து மதம் சாராத ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளமைக்கு இந்துக்கள் சார்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையிலேயே இந்த முடிவுக்கு வந்ததாக காதர் மஸ்தான் குறிப்பிட்டார்.
இந்து கலாசார பிரதியமைச்சுப் பொறுப்பை தனது கட்டுப்பாட்டிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுத்துமூல கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் அந்தக் கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக மீளவும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்.அதற்காக ஜனாாதிபதியை இன்று சந்திக்கின்றேன் என்று பிரதியமைச்சர் காதர் மஸ்தான் மேலும் தெரிவித்தார்.
மஸ்தான் விவகாரம் தேவையற்ற மோதலை உருவாக்கும்! - மனோ கணேசன்
இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சராக இஸ்லாமியர் ஒருவரை நியமித்ததால், அது தேவையற்ற மோதல்களை உருவாக்கும் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.