கிளிநொச்சி மாணவனின் சடலத்தைக் கொண்டு வர 30,000 ரூபா அறவிட்ட செஞ்சிலுவைச் சங்கம்!
11 Jun,2018
[
கொழும்பில் தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து இறந்த கிளிநொச்சி மாணவன் கோணேஸ்வரன் நிதர்சனின் உடலை இலவசமாக கொண்டு வருவதாக தெரிவித்து, விட்டு வாகன வாடகையாக 30,000 ரூபாவை பெற்றுக்கொள்ளப்பட்டதாக உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த 8 ஆம் திகதி கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவனின் உடலை கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வருவதற்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் வாகனத்தை இலவசமாக ஏற்பாடு செய்து தருவதாக பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் மாணவனின் குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டு பிரதேச சபை உறுப்பினர் வாகனத்திற்கான எரிபொருளை மாத்திரம் வழங்குமாறு கோரியிருந்தார். இதற்கு குடும்பத்தினர் சம்மத்தித்திருந்தனர். இதன் பின்னர் வாகனம் கொழும்பு சென்று மாணவனின் உடலை ஏற்றிக்கொண்டு கிளிநொச்சி அக்கராயன்குளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வந்து சேர்ந்த பின்னர் வாகன வாடகையாக 30,000 ரூபாவை வழங்குமாறு கூறி பணத்தையும் பெற்றுச் சென்றுள்ளனர்.
வழமையாக கொழும்பிலிருந்து கிளிநொச்சி இவ்வாறான ஒரு தேவைக்கு வாகனத்தை பிடிப்பதாக இருந்தால் 20,000 ரூபாவுக்கு பிடித்திருக்க முடியும் என்றும், இதனை விட தங்களின் நிலைமையினை கருத்தில் கொண்டு பலர் மாணவனின் உடலை கொண்டுவருவதற்கு உதவ தயாராக இருந்த நிலையில் இவர்கள் இப்படி நடந்து கொண்டது கவலையளிக்கிறது எனத் தெரிவித்தனர் உறவினர்கள்.
ஆரம்பத்திலேயே தங்களிடம் உண்மையை கூறியிருந்தால் தாங்கள் அதற்கேற்ற ஒழுங்கை மேற்கொண்டிருப்போம் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி கிளையின் செயலாளர் சேதுபதியை தொடர்பு கொண்டு வினவிய போது, மாணவனின் உடலை கிளிநொச்சி கொண்டு வருவற்கு வாகனத்தை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கோரியிருந்தார். அவரிடம் நான் தெளிவாகவே வாகன கூலி 30,000 ரூபா எனத் தெரிவித்திருந்தேன். அதனையே நாங்கள் பெற்றுக்கொண்டோம். எங்களுக்கும் மாணவனின் குடும்பத்தினருக்கும் இடையில் எவ்வித தொடர்பாடலும் கிடையாது என்று தெரிவித்தார்.
உயிரிழந்த மாணவன் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இவ்வருடம் உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவன். இவரது குடும்பம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றனர். இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரனும் குடும்பத்தில் உள்ளனர். தந்தை சிறு தொழில் முயற்சி ஒன்றில் ஈடுபடுகின்றார். தாய் சமீபத்தில் ஆசிரிய தொழிலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். மாணவன் தனது பொருளாதார தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காகவே தொழிலுக்குள் சென்ற நிலையில் இவ் விபரீதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.