சிங்களப் பத்திரிகைகளில் வெளியான பொய்ச் செய்தி - விசாரணைக்கு உத்தரவிட்டார் ஜனாதிபதி!
26 May,2018
[
இரண்டு சிங்களப் பத்திரிக்கைகளில் நேற்று வெளியான செய்திகள் தொடர்பாக, விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
தேசிய செய்திப் பத்திரிகைகளான தினமின மற்றும் லக்பிம ஆகியவற்றில் பிரசுரிக்கப்பட்டுள்ள “சிவில் போராட்டங்களுக்கான பின்னணியை ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இடமளிக்க வேண்டாம்” மற்றும் “நாட்டைப் பிளவுபடுத்தும் செயல்கள் தொடர்பாக பாதுகாப்புத் துறையினர் அவதானத்துடன் உள்ளனர்” எனும் தலைப்புகளில் அமைந்த செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை.
குறித்த செய்தி அறிக்கைக்கேற்ப, அண்மையில் இடம்பெற்ற பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களே அந்த செய்தி அறிக்கைக்கு ஏதுவாக அமைந்ததென குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், நாட்டின் பாதுகாப்பிற்கோ அல்லது மக்களின் பாதுகாப்பிற்கோ அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு சபைக்கு தகவல்களேதும் கிடைத்திராத பின்னணியில் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான எதுவித அவசியமும் ஏற்படவில்லை. ஆகையினால் இச்செய்தி, யாரேனுமொரு நபர் அல்லது அமைப்பினால் உருவாக்கப்பட்டு ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒரு பொய்யான செய்தியாகும்.
இத்தகைய பொய்யான செய்தியை ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தவர் யார் என்பது பற்றிய துரித விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கௌரவ ஜனாதிபதி அவர்களினால் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.