மீண்டும் தொடங்கிய ஸ்ரீலங்கா அரச படையின் அராஜகம்!
25 May,2018
முறிகண்டியில் பொதுமக்கள் பயன்படுத்திய காணிகளை இராணுவத்தினர் மீண்டும் கையகப்படுத்தும் நோக்கில் வேலி அமைக்க முற்படுகின்றனர் என குற்றஞ்சாட்டப்படுகிறது.
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இந்தப் பகுதி 2015 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டது. அதனைப் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், படையினர் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
அது தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசாவும் பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளும் நேற்றுமுன்தினம் சென்று ஆராய்ந்தனர்.
குறித்த பகுதியில் 10 ஏக்கர் வரையான காணி அங்கு அமைந்துள்ள இந்து ஆலயம் ஒன்றுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதனையே படையினர் வேலி அமைத்து அடைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர் என்று பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதனை அண்மித்த இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி இல்லாமையால், பதில் அதிகாரியுடன் அது தொடர்பில் பேசினர். எனினும், எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் தமது அலைபேசிகளில் ஒளிப்பதிவு செய்து, அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.