முன்னாள் போராளி வீட்டில் ரவைகள், வெடிபொருட்களை கண்டறியும் கருவி மீட்பு!
23 May,2018
கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் முன்னாள் போராளியான முனியாண்டிராஜா ரஞ்சன் (தீபன்) என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட தேடுதலின் போது, மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் இருந்த வெடிபொருட்களை கண்டறியும் கருவி, கைத்துப்பாக்கி மற்றும் 5 ரவைகள் இன்று படையினரால் மீட்கப்பட்டன. தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியின் வீட்டில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக விமானப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற அனுமதியுடன் இன்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, சுமார் ஆறு அடி ஆழத்தில் பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட பெட்டி ஒன்றினுள் வைத்து புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை கண்டறியும் கருவி, கைத்துப்பாக்கி மற்றும் ரவைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. இவை பாவிக்கக் கூடிய நல்ல நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த முன்னாள் போராளி புலம்பெயர் நாட்டில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.