இலங்கையின் பல பகுதிகளில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) கடும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, மேல், வடமேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலவும் என திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திற்கு 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும். அதேவேளை, ஏனைய சில மாகாணங்களுக்கு 100 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, அனர்த்த நிலைமைகள் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற வானிலையினால், 7 மாவட்டங்களுக்கு எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி, குருநாகல் மற்றும் பதுளை ஆகிய 7 மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிடம் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதிப் கொடிப்பிலி தெரிவிக்கின்றார்.
மண்சரிவு அபாயம் ஏற்படும் இடங்கள்
150 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் மாவட்டங்களுக்காகவே இந்த சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினர்.
இதன்படி, ரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட குருவிட்ட, எலபாத்த ஆகிய பகுதிகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் ஏற்படும் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கும் இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தின் நெலுவ, எல்பிட்டிய, தவலம, கடவஸ்அத்தர மற்றும் நாகொடை ஆகிய பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்வது சிறந்ததாக அமையும் என தேசிய கட்டிட ஆராச்சி நிறுவனம் தெரிவித்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதிப் கொடிப்பிலி கூறினார்.
இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால், வெள்ள பெருக்கு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, களுகங்கையின் நீர்மட்டம் அதிகரித்து, மில்லகந்த பகுதியில் ஆற்று நீர் பெருக்கெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், மதுராவல, ஹொரணை, புலத்சிங்கல, இங்கிரிய, பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அத்தனகல்லஓய பெருக்கெடுத்துள்ளமையினால், வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், நீர்கொழும்பு, ஜா-எல, மினுவங்கொடை மற்றும் கம்பகா ஆகிய பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அனர்த்த நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில், உடனடி உதவிகளை வழங்குவதற்காக தமது படையினர் தயார் நிலையில் உள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.
இதற்கமைய, மேல் மாகாண பாதுகாப்பு படை பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிடிகேடியர் சுமித் அத்தப்பத்து குறிப்பிட்டார்.
மேலும், அனர்த்தங்கள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்ற பகுதிகளிலுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக படகுடன், 17 குழுக்கள் தயார் நிலைப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும், காலி மாவட்டத்திற்கும் இந்த குழுவினர் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் நிலவும் அதிக மழை வீழ்ச்சியுடனான வானிலையினால் பல பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.
இதன்படி, காலி, மத்துகம மற்றும் அகலவத்தை ஆகிய பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளன.
மத்துகம, காலி மற்றும் அகலவத்தை ஆகிய பகுதிகளில் பெய்த கடும் மழையினால் மின்சார சபையின் பிரதான மின் கட்டமைப்பு மின் ஆழி செயலிழந்துள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன கூறினார்.
மேலும், மரம் முறிந்து வீழ்ந்தமையினால், தடைப்பட்டிருந்த கேகாலை நகருக்கான மின்சார விநியோகம் மீண்டும் வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ள பகுதிகளுக்கான விநியோகத்தை வழமை போன்று வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுப்பட்டு வருவதாகவும் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன கூறினார்.
இதேவேளை, தற்போது ஏற்பட்டுள்ள அதிக மழையுடனான வானிலையினால், அதிவேக வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அதிவேக வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள், மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறு அதிவேக வீதி கட்டுப்பாட்டு பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டிலுள்ள சட்டத்திற்கு அமைய, மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் வாகனங்களை செலுத்த வேண்டியுள்ள போதிலும், தற்போதுள்ள நிலைமையின் கீழ் வீதி வலுக்கும் அபாயம் காணப்படுவதாக அந்த பிரிவின் அதிகாரியொருவர் சுட்டிக்காட்டினார்.
வீதி விபத்துக்களை தவிர்க்கும் நோக்குடனேயே தாம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
அதிவேகத்தில் வாகனங்களை செலுத்தாத சாரதிகளுக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட மாட்டாது என, அதிவேக வீதியிலுள்ள அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, அதிவேக வீதிகளில் இன்று 6 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, தெற்கு அதிவேக வீதியில் 4 வாகன விபத்துக்களும், கட்டுநாயக்க அதிவேக வீதியில் 2 வாகன விபத்துக்களும் பதிவாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரத் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் சிறுமியொருவரும், பெண்ணொருவரும் காயமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சீரற்ற வானிலையினாலேயே இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகன போக்குவரத்து கடும் பாதிப்பு
இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய சீரற்ற வானிலையினால் காலி நகருக்குள் பிரவேசிக்கும் பிரதான வீதி வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
தொடர்ந்து பெய்த கடும் மழையுடன் கூடிய வானிலையினால் இன்று காலை இந்த வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது
காலி - பத்தேகம வீதியும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
இதனால் வாகன போக்குவரத்துக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் தென் மாகாணத்தின் கடல் பிராந்தியங்களில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது.
இதனால் காலி மற்றும் அதனை அண்மித்த கடல்சார் தொழிலாளர்கள் கடற்றொழிலுக்கு செல்லவில்லை..
மேலும், கிங் கங்கையின் நீர்மட்டம் சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மாத்தறை - தெனியாய பிரதான வீதியின் நெலுவ பகுதி வெள்ள நீரில் மூழ்கியுள்ளமையினால், போக்குவரத்து நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
நெலுவ - மொரவக்க பிரதான வீதியில் சுமார் இரண்டு அடி உயரத்திற்கு வெள்ள நீர் தேங்கி நிற்கின்றன.
மேலும், குறித்த பகுதியிலுள்ள தாழ் நிலப் பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளன.
இதேவேளை, மத்திய மாகாணத்தில் பெய்துவரும் கடும் மழையுடன் கூடிய வானிலையினால் லக்ஷபான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன
அத்துடன், காசல்ரீ, கெனியன் மற்றும் விமல சுரேந்திர ஆகிய நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளிலும் கடும் மழையுடன் கூடிய வானிலை நிலவி வருகின்றன.