அம்பாந்தோட்டையில் தீவுக்கு உரிமை கோரும் சீனா!
20 May,2018
அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள செயற்கை தீவை தமக்கு வழங்காவிட்டால், துறைமுக கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான அடுத்த தவணை பணத்தை கொடுக்க முடியாது என்று சீன நிறுவனம், இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. தீவை தமக்கு வழங்கும் வரையில், 500 மில்லியன் அமெரிக்க டொலர் தவணை பணத்தை சீன நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 60 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 110 ஹெக்டேயர் பரப்பளவை கொண்ட இந்த தீவு உருவாக்கப்பட்டது. இந்த தீவின் இன்றைய சந்தை பெறுமதி 500 மில்லியன் அமெரிக்க டொலர். இந்த தீவில் சுற்றுலா விடுதிகள், களியாட்ட நிலையங்களை நிர்மாணிப்பது என முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கிய பின்னர், இந்த தீவும் உடன்படிக்கைக்கு உட்பட்டது என சீனா கூறி வருகிறது.இந்த தீவு இலங்கையின் எல்லைக்குரிய தீவு என வர்த்தமானியில் அறிவிக்க வேண்டும். இதற்கு தென் மாகாண சபையின் அனுமதியும் அவசியம். எனினும் தீவை வர்த்தமானியில் அறிவித்து, சீனாவுக்கு வழங்குவதை தென் மாகாண சபை கடுமையாக எதிர்த்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த தீவு தொடர்பான பிரச்சினை பாரிய நெருக்கடியாக மாறியுள்ளது