ரக்பி வீரர் இருவரின் உடல்கள் பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது
19 May,2018
இலங்கையில் நட்பு ரீதியான ரக்பி போட்டிகளில் பங்கேற்க வந்து, மர்மமாக மரணித்த பிரிட்டன் ரக்பி வீரர் இருவரின் உடல்கள் பிரிட்டனுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக போலீஸார் உறுதிப்படுத்தினர்.
கடந்த 13ஆம் தேதி உயிரிழந்த தாமஸ் ஹாவர்ட்டின் உடலை உரிய தரப்பினர் ஊடாக பிரிட்டனுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு முன்னதாக, கடந்த 15ஆம் தேதி உயிரிழந்த தாமஸ் பெட்டி என்பவரின் உடலை அவரது தந்தையிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, குறித்த இருவரின் உடல்களும் பிரிட்டனுக்கு இன்று (19ஆம் தேதி) அதிகாலை அனுப்பிவைக்கப்பட்டதாக போலீஸார் உறுதிப்படுத்தினர்.
நட்பு ரீதியான ரக்பி போட்டிகளில் விளையாட கடந்த மே 10 அன்று பிரிட்டனைச் சேர்ந்த 'Clems Pirates Rugby' அணியினர் இலங்கை வந்தனர். இந்த அணியின் 25 வயதான தாமஸ் ஹாவர்ட் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதன்பின்னர் 26 வயதான தாமஸ் பெட்டி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் மே 15 அன்று உயிரிழந்தார்.
இவர்களின் மரணத்தில் மர்மம் நீடித்து வருவதால் போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த மரணம் தொடர்பான வழக்குகளை வரும் 25ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று அறிவித்தது. அன்றைய தினம் சட்ட மருத்துவ அதிகாரியின் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.