இராணுவத்தில் இணையுங்கள்”: யாழ். இளைஞர்களிடம் கோரிக்கை
11 May,2018
“வடக்கு இளைஞர்களை இராணுவத்தில் இணைய முன்வருமாரு யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராட்சி அழைப்பு விடுத்துள்ளார்.
சிங்கள டிப்ளோமா கற்கைநெறியைப் பூர்த்தி செய்த 600 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
வடக்கு மக்கள் மிகவும் புத்திசாலிகள். நல்லவர்கள். எனினும் கடந்த 30 வருடப் போர் வடக்கு மக்களையும் தெற்கு மக்களையும் சற்று பிரித்து விட்டது.
எனினும் தெற்கு சிங்கள மக்கள் வடக்கு தமிழ் மக்கள் மீது நல்ல அபிப்பிராயம் கொண்டவர்களாக உள்ளனர்.
30 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் வடக்கில் மின்சாரம் இல்லாத நிலையில் கூட வடக்கிலிருந்து சிறந்த மருத்துவர்கள், பொறியியலாளர்கள் உருவாகியிருந்தார்கள்.
எனவே தற்போதைய இளைஞர், யுவதிகள் இராணுவத்தை சிங்கள இராணுவம் என்று எண்ணாதீர்கள். இராணுவ வேலையும் ஒரு அரச வேலை தான்.
எனவே வடக்கு இளைஞர்களும் இராணுவத்தில் இணைந்து நாட்டுக்குச் சேவையாற்ற முன் வரவேண்டும் என்றார்.