கோட்டாபாய கைது?- தயாராகும் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு
09 May,2018
ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை இராணுவப் புலனாய்வு அதிகாரிகளைக் கொண்டு கைதுசெய்யும் சதித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கோட்டாபயவின் விசுவாசியான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்காகவே ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரியான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மஹிந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்திருக்கின்றார்.
ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பில் இன்றைய தினம் மஹிந்த அணியைச் சேர்ந்த பிவிதுரு ஹெல உறுமய கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்தக் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி கருத்துத் தெipவித்த கம்மன்பில:
"மைத்ரி – ரணில் அரசாங்கம் தமக்கு பெரும் அச்சுறுத்தலாக கோட்டாபய ராஜபக்சவை பார்க்கின்றது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாய போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என்பதை அரசாங்கத்தின் தலைவர்கள் இருவரும் நன்கு அறிந்து வைத்துள்ளனர். அதனாலேயே அவரை கைதுசெய்வதற்காக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர். ஆனால் அவற்றை நீதிமன்றில் அவர்களால் நிரூபிக்க முடியாது போயுள்ளது. எனினும் கோட்டாபயவை கைதுசெய்ய தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதால் நீதிமன்றின் ஊடாக அவற்றுக்கு தடை உத்தரவை பெற வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். ஆனால் அரசாங்கம் அந்த முயற்சிகளை கைவிடவில்லை. தற்போது இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியை கைதுசெய்து அவரது ஒப்புதல் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொண்டு கோட்டாபயவை கைதுசெய்யும் முயற்சியொன்றை முன்னெடுத்துள்ளனர். அதற்கமையவே ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுத் துறை பொறுப்பதிகாரியான மேஜர் ஜெனரல் அமல் கருணாரத்னவை கைதுசெய்து விளக்கமறியலில் வைத்திருக்கின்றனர். அவருக்கு நெருக்குதல் கொடுத்து அவர் மூலம் கோட்டாபயவின் உத்தரவின் பேரிலேயே எக்னலிகொடவை கடத்தியதாக வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வுப் பிரினருக்கு அரசின் உயர் மட்டம் உத்தரவிட்டுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் அதற்கு இணங்க மறுத்து வருவதாலேயே அவர்களை தொடர்ச்சியாக இந்த அரசாங்கம் துன்புறுத்தி வருவதுடன் விளக்கமறியிலிலும் வைத்திருக்கின்றது. எனினும் ஒப்புதல் வாக்குமூலமொன்றை பெறுவதற்காக ஒருவருக்கு அச்சுறுத்துவதும் அழுத்தம் கொடுப்பதும் தண்டனைக்குறிய குற்றம் என்பதை இராணுவ புலனாய்வு அதிகாரிகள் நினைவில் கொள்ள வேண்டும் என்பதை இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அதேவேளை அரசியல்வாதிகளின் தேவைகளுக்காக செயற்பட்டு இராணுவத்தின் கௌரவத்தை இழிவுபடுத்திவிட வேண்டாம் என்று இராணுவத்தின் உயர்மட்ட தளபதிகளிடத்தில் நாம் பகிரங்கமாக கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம்