நைஜீரிய வலையில் வீழ்ந்து பெருமளவு பணத்தை இழக்கும் இலங்கையர்கள் :
08 May,2018
இலங்கையர்களிடமிருந்து பெருமளவு பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் நைஜீரீயாவை சேர்ந்த பலரை இலங்கையின் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.நைஜீரியாவை சேர்ந்த மோசடிக்கும்பலை ஹிக்கடுவையில் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள நைஜீரிய பிரஜைகள் இலங்கையர்களை இணையம் மூலம் தொடர்புகொண்டு அவர்களை ஏமாற்றியுள்ளனர்.
நைஜீரிய பிரஜைகளிடமிருந்து பரிசுப்பொருட்களை பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் பின்னர் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து அந்த விபரங்களையும் டெபிட் கார்ட்களையும் நைஜீரியர்களிடம் வழங்கியுள்ளனர்.தாங்கள் பெருமளவு பரிசுப்பொருட்களை வழங்குவதாக ஆசைவார்த்தை காட்டியுள்ள நைஜீரிய பிரஜைகள் இலங்கையர்களை வங்கிக்கணக்குகளில் பெருமளவு பணத்தை வைப்பிலிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த மோசடி குறித்த முறைப்பாடுகள் கிடைத்ததை தொடர்ந்து இலங்கையின் குற்றப்புலனாய்வு பிரிவினர் நைஜீரிய பிரஜைகள் தங்கியிருந்த வீடுகளை சோதனையிட்டுள்ளனர்.இது தொடர்பில் ஏழு நைஜீரிய பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இருவரை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் உதைபந்தாட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்து சுற்றுலா விசாவில் இலங்கைக்குள் நுழைந்த நைஜீரிய பிரஜைகளே மோசடியில் ஈடுபட்டள்ளனர். இவர்களில் எவரும் இலங்கை பெண்களை திருமணம் செய்யவில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் எனினும் இவர்கள் திருமணமான பெண்களை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர் எனக்குறிப்பிட்டுள்ளனர்.