லெபனானில் உள்ள 49 படையினரை ஆய்வுக்குட்படுத்த ஐ.நா. உத்தரவு
22 Apr,2018
லெபனானில் உள்ள 49 படையினரை ஆய்வுக்குட்படுத்த ஐ.நா. உத்தரவு
ஐ.நா அமைதிப்படையில் பணியாற்ற லெபனானுக்கு அனுப்பப்பட்ட 49 சிறிலங்கா படையினர் தொடர்பான மனித உரிமை ஆய்வுகளை முன்னுரிமை கொடுத்து உடனடியாக, மேற்கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளதாக ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கை பணியக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆய்வுகள் முடிய முன்னரே, சிறிலங்கா இராணுவத்தின் 49 பேர் கொண்ட அணியொன்று கடந்த பெப்ரவரி மாதம் லெபனானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து, ஏனைய அணிகள் லெபனானுக்கு அனுப்பப்படுவதை ஐ.நா அமைதிப்படைச் செயலகம் தடுத்திருந்தது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கை பணியக பேச்சாளர் நிக் பேர்ன்பக், “மனித உரிமைகள் ஆய்வுக்குட்படுத்தப்படாமல், லெபனானுக்கு அனுப்பப்பட்ட 49 சிறிலங்கா படையினர் குறித்து உடனடியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஏற்கனவே லெபனானுக்கு அனுப்பப்பட்ட 49 சிறிலங்கா படையினர் தொடர்பாக இந்த ஆய்வுகளில் மனித உரிமை கரிசனைகள் எழுப்பப்பட்டால், அவர்களைத் திருப்பி அழைக்குமாறு சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்படக் கூடும். அத்துடன், அரசாங்கத்தின் செலவிலேயே வேறு நபர்களை அனுப்பும் நிலையும் ஏற்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.