முக்கிய கொலைகளுக்கு உத்தரவிட்டவர் ஒரே நபர் தான்! -
21 Apr,2018
முன்னைய ஆட்சிக்காலத்தில் நடந்த பாரதூரமான- மர்மமான கொலைகள் மற்றும் 5 தாக்குதல்கள் சம்பவங்களுக்கு கட்டளையிட்டது ஒரே நபர் தான் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னேலிகொட கடத்தல், வெலிக்கடை சிறைச்சாலையில் 27 கைதிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள், கீத் நொயார் மீதான தாக்குதல் மற்றும் ரத்துபஸ்வல தாக்குதல் என்பது இந்த மர்மமான சம்பவங்களாகும்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் மிகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த குற்றச் செயல்கள் சம்பந்தமாக பொலிஸ், பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் மேலும் புலனாய்வு சேவைகளை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவங்களின் பின்னணியில் இருந்த நபர், அந்த குற்றச் செயல்களுடன் எப்படி சம்பந்தப்பட்டிருந்தார் என்பதையும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இது சம்பந்தமான தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அவரிடம் வாக்குமூலம் பெறவும் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் நீதிமன்றத்தின் அனுமதியை பெற விசாரணை அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.
லசந்த விக்ரமதுங்க, எக்னெலிகொட, சிறைச்சாலை கொலை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளும் ஏனைய பாதுகாப்பு அதிகாரிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக லசந்த கொலை தொடர்பிலான விசாரணைகளை சீர்குலைக்க ஆலோசனை வழங்கிய நபர் குறித்து பல தகவல்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த மர்மமான கொலைகளுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் பிரதான நபரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சுதந்திரமாக நடமாட விடாது, விசாரணைகளின் தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, நீதிமன்றத்தில் ஆலோசனையின் படி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க குற்றப் புலனாய்வு திணைக்களம் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது என தொடர்ந்தும் கூறப்பட்டு வந்த போதிலும் மூன்று வருடங்களுக்கு மேலாக விசாரணைகளும், நீதிமன்ற நடவடிக்கைகளும் மிகவும் மந்தமாகவே இடம்பெற்று வருகின்றன.
சுமார் 9 வருடங்களுக்கு முன்னர், மர்மமான முறையில் கொடூர தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் சந்தேக நபர்கள் எவருமின்றி மூடி மறைக்கப்பட்ட நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. விசாரணைகளை நடத்திய குற்றப் புலனாய்வு திணைக்களம், எவரும் எதிர்பார்க்காத வகையில் குற்றச் செயல் சம்பந்தமான அறிக்கையை தயார் செய்ததுடன் விசாரணைகளை மூடி மறைத்த பொலிஸ் அதிகாரிகளை கைதுசெய்தது.
இந்த கொலை தொடர்பான வழக்கு தற்போது கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னேலிகொட இதே விதமான மர்மமான முறையில் காணாமல் போனார். பொரள்ளை பிரதேசத்தில் நடந்த விருந்து ஒன்றில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய அவர் கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட அவர் கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதேவேளை வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை சம்பவம் கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்தது. சிறைச்சாலை தாக்குதல் சம்பவத்தில் 27 கைதிகள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். இதில் 11 பேரை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டார். முக்கிய சந்தேக நபரான சிறைச்சாலை அதிகாரி நாட்டில் இருந்து தப்பிச் சென்றார்.
அதேபோல் நேஷன் பத்திரிகையின் துணை ஆசிரியர் கீத் நொயார் கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி கடத்தப்பட்டார்.வெள்ளவத்தையில் உள்ளது தனது வீட்டுக்கு செல்லும் வழியில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை வானில் இருந்தவர்கள், கீத் நொயாரை வழிமறித்து கடுமையாக தாக்கி, கடத்திச் சென்று சித்திரவதைக்கு உள்ளாகி விடுக்கப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக இராணுவ புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரை இரண்டு வாரங்களுக்கு முன்னா் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்தனர். சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதுடன் நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, மேஜர் ஜெனரல் விடுத்த பிணை கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது