இலங்கை, சர்வதேச பொலிஸாரினால் தேடப்படும் முக்கிய நபர்! சிங்கப்பூரில் சுதந்திரமாக திரியும் காட்சி
19 Apr,2018
மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் சுதந்திரமாக சுற்றித்திரிவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்ட அர்ஜுன் மகேந்திரன் பிணைமுறி மோசடி மூலம் பாரிய கையாடலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இலங்கையில் குடியுரிமையற்ற சிங்கப்பூர் நாட்டவரான அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன்னர் அவர் இலங்கையை விட்டு சென்ற விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதேவேளை, மத்திய வங்கி முன்னாள் ஆளுநருக்கு சமமான உருவம் கொண்ட நபர் ஒருவர் சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பிரதேசத்தில் கெப் வண்டி ஒன்று வரும் வரை காத்திருக்கும் போது அங்கு வாழும் இலங்கை இளைஞர்கள் சிலரே இந்த புகைப்படத்தை எடுத்துள்ளதாக குறித்து ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட மற்றுமொரு நபரான அர்ஜுன் அலோசியஸ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச பொலிஸார் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.