பாழடைந்த கிணறு ஒன்றில் பெருந்தொகையான கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன
10 Apr,2018
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திலுள்ள வீடொன்றின் காணி வளவிலிருந்து பெருந்தொகையான கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளையிலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்தே இந்தக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இதன்படி 40 கைக்குண்டுகளை தாம் மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியிலுள்ள கிணற்றினைச் சுத்தம் செய்யச் சென்ற சிலர் குறித்த கைக்குண்டுகளை அவதானித்துள்ளனர். இதனையடுத்து அது தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸாருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது.
பின்னர், கண்ணி வெடி அகற்றும் அரச சார்பற்ற அமைப்பின் அதிகாரிகளும் பொலிஸாரும் கிணற்றைச் சோதனையிட்ட பின்னர் குறித்த 40 கைக்குண்டுகளும் மீட்கப்பட்டன.
இதேவேளை மீட்கப்பட்ட அந்த நாற்பது கைக்குண்டுகளும் மிகப் பழையவையென்றும் அவை விடுதலைப் புலிகளின் காலத்தில் புதைக்கப்பட்டனவாக இருக்கலாம் எனவும் பொலிஸாரால் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.