அடுத்த கட்டநடவடிக்கையில் அரசு இறங்க வேண்டும்! - ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற குழு
06 Apr,2018
பிரதமருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் அரசால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனநாயகத்தின் ஒரு சிறந்த அம்சமாகவே இதனைப் பார்க்கிறோம். தற்போது கிடைத்துள்ள இந்த வெற்றியை அரசு சிறந்த முறையில் பயன்படுத்தி எதிர்காலப் பயணத்தை முன்னெடுக்கும் என்று நம்புகின்றோம் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற குழுவினர் தெரிவித்தனர்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பன்னாட்டு வர்த்தகம் தொடர்பான நாடாளுமன்றத் தூதுக்குழு கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த விடயங்களைத் தெரிவித்தனர்.
ஜனநாயகப் பண்புகள் இருக்கின்ற நாட்டில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் உரிமை எதிர்க்கட்சிக்கு உள்ளது. அதேபோன்று அதனைத் தோற்கடிக்கும் உரிமை ஆளும்கட்சிக்கு உள்ளது. அந்த ஜனநாயகப் பண்பை இலங்கையில் பார்த்தோம். இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஊடாக இலங்கை அரசுக்கு ஒரு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கை அரசை வலுவாக்கித் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று நம்புகின்றோம். கிடைத்துள்ள இந்த வெற்றியின் ஊடாக இலங்கை அரசு மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து தீர்க்கப்படாத பல நெருக்கடிகளுக்கு தீர்வுகாணும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றனர்