பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 10 நிபந்தனைகளை ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத்துள்ளது.
தமிழ் மக்களின் நீண்டகால அவலமும் உடனடித் தேவைகளாகவும் உள்ள 10 விடயங்களை எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பிற்கு முன்னர் நிறைவேற்றி வழங்குவதாக எழுத்தில் உறுதியளித்தால், நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை எதிர்க்கலாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது கூட்டமைப்பு மேற்கொள்ளவேண்டிய நிலைப்பாடு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கூடியது. நீண்ட வாதப் பிரதிவாதங்களுடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் இறுதியில் ரணிலுடன் பேரம் பேசுவது என்ற முடிவு எடுக்கப்பட்டது.
அதற்கமைய 10 கோரிக்கைகள் அடங்கிய நிபந்தனைப் பட்டியல் ஒன்றும் தயாரிக்கப்பட்டு ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகளாவன,
புதிய அரசமைப்பு முயற்சியை எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்பாகப் பூர்த்திசெய்து நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்றுதல்.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் பிரதேசத்தில் படைகள் வசம் தொடர்ந்தும் உள்ள நிலப்பரப்புக்களை விடுவித்தல்.
இதேகாலத்தில் சிறையில் வாடும்அரசியல் கைதிகளை மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்தல்.
காணாமல்போனோரின் உறவுகள் கடந்த ஓராண்டாக வீதியில் உள்ள நிலையில் காணாமல்போனோர் செயலகம் என்ற ஒன்றைத் தவிர வேறு எந்த உருப்படியான முன்னேற்றமும் இல்லாதமையினால் அதற்கான பொறுப்புக்கூறலுடன் உரிய தீர்வினைக் கூறுதல்.
வடக்கு கிழக்குப் பகுதிகளில் தொழில் முயற்சி என்னும் பெயரில் குடியேற்ற முயற்சியோடு அந்தப் பகுதி மக்களின் உரிமை மறுக்கப்படுவது தொடர்பில் நீண்டகாலமாகச் சுட்டிக்காட்டும் விடயத்திற்கு உரிய தீர்வு வழங்குதல்.
வடக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் வேலை வாய்ப்பின்றியுள்ள நிலையில் சிறப்பாகவேலைவாய்ப்பு வழங்கி அதற்கான தீர்வை வழங்குவதோடு வடக்கு கிழக்கு பகுதிக்குத் தெற்கில் இருந்து நியமனம் வழங்குவதனை நிறுத்துதல்.
வடக்கு கிழக்கு மாகாணத்தின் 8 மாவட்டங்களிற்கும் தமிழ் அரச அதிபரை நியமித்தல்.
வடக்கு , கிழக்கு மாகாணங்களில் திட்டங்கள் அபிவிருத்திகளின்போது மாகாண அரசின் கொள்கைகள் திட்டங்களிற்கு முன்னுரிமை அளிப்பதோடு திட்டத் தயாரிப்பின்போதே மாகாண சபையின் கருத்தைப் பெறுதல்.
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேரும் நேற்றுச் சந்தித்துப் பேசியபோது அவரிடம் இந்தக் கோரிக்கைகள் அடங்கிய கடிதம் கொடுக்கப்பட்டது. இதற்கு அவர் எழுத்து மூலம் வழங்கும் பதிலைப் பொறுத்து இன்று கூட்டமைப்பின் முடிவு தெரியும் என்று கூறப்பட்டது.