அந்த 5 சிங்கள பொலிஸ்சுக்கு மீண்டும் வேலை: 2 தமிழ் மாணவர் கொலை என்ன ஆச்சு ?
28 Mar,2018
யாழ்ப்பாணத்தில் பொலிசார் சுட்டு 2 பல்கலைக் கழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பற்றி நாம் அறிவோம். அவர்களை புதைத்த இடத்தில் இன்னும் புல் கூட முளைக்கவில்லை, ஆனால் சுட்ட பொலிசார் ஐவரையும் மீண்டும் வேலையில் அமர்த்தியுள்ளது மைத்திரி அரசு...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேக நபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்களும் மீளவும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களான 5 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் கையொப்பமிட வேண்டும் என்றும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் தென்னிலங்கையில் மீளவும் பணியில் இணைந்துள்ளனர்.5 பொலிஸாரும் சேவையில் மீள இணைக்கப்பட்டதை அடுத்து அவர்களின் பிணை நிபந்தனைகளில் ஒன்றை இலகுபடுத்தப்படுத்துமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் அனுமதியளித்தது.
யாழ்ப்பாணம் – கொக்குவில் – குளப்பிட்டி சந்தியில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டனர்.